About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, July 15, 2015

34. படிப்பது ராமாயணம்!

அன்னதானம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. ராமலிங்கத்துக்குப் பெருமை தாங்கவில்லை.

"இந்த ஊர்ல உங்களை விட்டா இது மாதிரி நல்ல காரியங்கள் செய்ய வேறு யார் இருக்காங்க?" என்றார் கோவில் பூசாரி.

"பணம் சம்பாதிக்கிறதே அதை நல்ல வழியில் செலவழிக்கணும் என்கிறதுக்காகத்தானே? ஆத்தா குடுக்கறா. அதில கொஞ்சம் எடுத்து நான் மத்தவங்களுக்குக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!"

பெருமையுடன் பக்கத்தில் நின்ற மனைவியைப் பார்த்தார்.

"எல்லாரும் என்னை அன்னபூரணின்னு சொன்னதைக் கேக்க ரொம்பப் பெருமையா இருந்ததுங்க" என்றாள் மரகதம்

"பாத்தியா பூசாரி? காசு செலவழிச்சு எல்லா ஏற்பாடும் பண்ணி அன்னதானத்தை நடத்தினது நான். ஆனா பளபளன்னு ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு வந்து பத்து நிமிஷம் என் பக்கத்தில நின்னு வேடிக்கை பாத்துட்டு எங்க வீட்டு அம்மா அன்னபூரணினு பேரை வாங்கிட்டுப் போயிடறாங்க!" 

"அப்ப நான் ஒண்ணுமே பண்ணலையாக்கும்?" என்று பொய்க் கோபத்துடன் அங்கிருந்து விலகி சற்று தூரத்தில் போய் நின்று கொண்டாள் 'அன்னபூரணி. 'பூசாரியும் ஒரு  கும்பிடு போட்டு விட்டு விடை பெற்றுக்கொண்டார்.

இதற்காகவே காத்திருந்த மாதிரி எங்கிருந்தோ விரைந்து அவர் அருகில் வந்து நின்றான் அவரது ஆள் வெள்ளையன்.

"என்னடா வெள்ளையா எங்கே போயிட்டே? அன்னதானத்தின்போது உன்னைக் காணுமே? பண்ணையிலே ஏதாவது பிரச்னையா?" என்று விசாரித்தார் ராமலிங்கம். 

"பண்ணையிலே இல்லை ஐயா"  என்று ஆரம்பித்தவன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "ஏங்க பண்ணை வீட்டுக்கு யாரையாவது வரச் சொல்லியிருந்தீர்களா?" என்றான்.

"இல்லையே!" என்ற ராமலிங்கம் டக்கென்று நினைவு வந்தவராகக் கையை சொடக்கிக் கொண்டார். "ஐயையோ! அன்னதானத் தேதி ஞாபகம் இல்லாமல் இன்னைக்கு அந்தப் பிரமீளாவை வரச் சொல்லியிருந்தேனே! வந்திருந்தாளா?"

"ஆமாங்க. நீங்க வர மாட்டீங்கன்னு நான் சொல்லியும் அந்தப் பொம்பளை போகாம ரெண்டு மணி நேரம் உக்காந்துட்டுத்தான் போச்சு. 'அவரு வந்தாலும் வராட்டாலும் நான் ஒப்புக்கொண்ட நேரத்துக்கு இருந்துட்டுத்தான் போகணும்'னு சொல்லுது."

"இதைச் சொல்லி வேலை செய்யாமலேயே எங்கிட்ட பணம் வாங்கிடணும்னு பாக்கறா போலிருக்கு. ஆனா நான் பணம் கொடுத்துத்தான் ஆகணும். இல்லாட்டா மார்க்கெட்டுல என் பேரைக் கெடுத்துடுவா!" என்று சிரித்தார் ராமலிங்கம். "ஆகக்கூடி உன்னை அன்னதானத்துக்கு வர முடியாம அவளுக்குக் காவலா அங்கியே உக்காரும்படி பண்ணிட்டா! சரி. சாப்பாடு மீதி இருக்கும். நீ உள்ள போய்ச் சாப்பிடு" என்றார்.

வெள்ளையன் உள்ளே போகத் திரும்பிய உடனேயே அருகில் யாரோ தொண்டையைச் செருமுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார்.

மரகதம்! 

சற்று தூரத்தில் தள்ளி நின்றிருந்த இவள் எப்போது இங்கே வந்தாள்? தான் வெள்ளையனுடன் பேசியதைக் கேட்டிருப்பாளோ?

அவள் முகத்தைப் பார்த்தார். அவளுடைய முகக்குறிப்பிலிருந்து எதுவும் தெரியவில்லை. அவளாகக் கேட்டாலே ஒழிய இதைப்பற்றி அவளிடம் கேட்கக் கூடாது. இனிமேல் யாரிடமாவது பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.

மரகதம் இரண்டு மூன்று முறை தொண்டையைச் செருமி விட்டு, நெஞ்சிலிருந்த கோழையை வாய்க்குக் கொண்டு வந்து மணல் தரையில் காறித் துப்பினாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.



அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற

பொருள்:
மனதில் எந்தத் தவறான எண்ணங்களும் இல்லாமல் தூய்மையாக இருப்பதுதான் அறம். மற்ற எதையுமே அறம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















No comments:

Post a Comment