About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 27, 2016

53. மனைவி செய்யும் மாயம்!

"அண்ணன் இல்லையா அண்ணி?" என்று வாயிற்படியில் நின்றபடியே கேட்டான் சண்முகம்.

"உங்க அண்ணன் எப்ப நேரத்தோட வீட்டுக்கு வந்திருக்காரு? ஏன் ஏதாவது கடன் கேக்கப் போறீங்களா?" என்றாள் சிவகாமி.

"நான் எப்ப அண்ணன்கிட்ட கடன் கேட்டிருக்கேன்?" என்றான் சண்முகம் அடிபட்டவனாக.

"எனக்கு எப்படித் தெரியும் உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற விவகாரம்? உங்களுக்குக் கடன் கொடுத்தா எங்கிட்ட சொல்லவா போறாரு உங்க அண்ணன்?"

இதற்குள் பழனி வந்து விட்டான். "ஏண்டா வாசல்லேயே நிக்கறே?... ஏம்மா வந்தவங்களை உள்ள கூப்பிடறதுல்ல?"

"அவரு என்ன வெளி ஆளா என்ன? உங்க தம்பிதானே? நான் கூப்பிட்டாத்தான் உள்ளே வருவாரா?" 

சிவகாமி உள்ளே போய் விட்டாள்.

"தம்பிக்கும் எனக்கும் காப்பி கொண்டா" என்றான் பழனி இரைந்து.

பழனியும், சண்முகமும் முன்னறையில் வந்து உட்கார்ந்தார்கள்.

"ஒண்ணுமில்ல அண்ணே! சங்கருக்குக் கல்யாணப் பத்திரிகை அடிக்கணும். அதுல நம்ம குடும்பப் பேரு, தாத்தா பேரு எல்லாம் போடணும் இல்லை? எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாதே! அதுதான் உன்கிட்ட விவரம் கேட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்."

"சொல்றேன். ஆனா ஒரு விஷயம் உறுத்திக்கிட்டே இருக்கு. உன்  பையன் நல்லாப் படிச்சிருக்கான். அவனுக்கு வசதியான இடத்திலேருந்தெல்லாம் பொண்ணு கொடுக்கப் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்களே, நீ ஏன் ஒரு சாதாரணக் குடும்பத்திலேருந்து பொண்ணு எடுக்கற? பொண்ணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் கூட இல்லை!"

"அண்ணே! நான் கூட அவ்வளவா வசதி இல்லாதவன்தான். என் பொண்டாட்டி வடிவும் ஏழைக் குடும்பத்திலேந்து வந்தவதான். நாங்க சந்தோஷமாத்தானே இருக்கோம்? இன்னும் சொல்லப் போனா சங்கர் வெளியூர்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சு இப்ப நல்ல வேலைக்குப் போயிருக்கான்னா அதுக்கு வடிவுதான் காரணம்.

"என்னோட குறைஞ்ச வருமானத்தில குடும்பத்தையும் நடத்தி, நாலு காசு சேத்து, போதாததுக்குக் கடனை உடனை வாங்கி சங்கரைப் படிக்க வச்சது அவதான். அதனாலதான் சங்கருக்குப் பொண்ணு பாக்கும்போதே வசதியான இடமான்னு பாக்கறதை விட, பொண்ணு குடும்பப் பாங்கானவளான்னுதான் பாத்துத் தேர்ந்தெடுத்தோம்.

"சங்கருக்கும் பொண்ணைப் புடிச்சிருக்கு. பொண்ணுக்கும் சங்கரைப் புடிச்சிருக்கு. இப்பல்லாம் நம்ம காலம் மாதிரி இல்ல. சங்கரும் அந்தப் பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னயே அடிக்கடி சந்திச்சுப் பேசி ஒத்தரை ஒத்தரு நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. வசதியா அண்ணே முக்கியம்? மனசுதானே முக்கியம்!" என்றான் சண்முகம்.

பழனி மனது புண்படக் கூடாதே என்று சண்முகம் சொல்லிக் காட்டாத விஷயங்கள் பழனியின் மனதில் அலை மோதின. பழனி வசதியானவன்தான். ஆனால் சிவகாமியின் பொறுப்பற்ற, யாரையும் மதிக்காத போக்கினால் பழனிக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை.

அவர்களின் ஒரே பெண் கூட அம்மாவின் போக்குப் பிடிக்காமல் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து விட்டு வெளியூரிலேயே வேலை செய்கிறாள். கல்யாணத்தைப் பற்றிப் பிடி கொடுத்துப் பேசுவதில்லை.

தன் பையன் கல்யாண விஷயத்தில் தம்பியின் அணுகுமுறை சரிதான் என்று தோன்றியது பழனிக்கு. தம்பி கேட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொடுத்தான்.

சண்முகம் விடை பெறும் சமயம்தான் அரை மணி நேரம் ஆகியும் இன்னும் மனைவி காப்பி கொண்டு வரவில்லை என்பது பழனிக்கு நினைவு வந்தது!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

பொருள்:
மனைவி உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாக இருந்தால் ஒருவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது எது? (எல்லாமே இருப்பது போல்தான்.) மனைவி பண்புள்ளவளாக இல்லாவிட்டால், வாழ்க்கையில் இருப்பது எது? (எதுவுமே இல்லாதது போல்தான்.)

இந்தக் கதைக்கான காணொளி இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













No comments:

Post a Comment