About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, February 24, 2016

55. மழை வருமா?

"ஏண்டி உங்க வீட்டில சாமிக்கு விளக்கேத்தற பழக்கம் எல்லாம் இல்லையா?" என்றாள் பத்மா.

"இருக்கு அத்தை" என்றாள் பிரியா.

'பின்னே ஏன் ஏத்தலே?"

"குளிக்காம விளக்கு ஏத்த வேண்டாம்னுதான்!"

'குளிக்காமயா சமையல் பண்றே?"

"இது அவருக்கு மட்டும் அத்தை. உங்களுக்குக் குளிச்சுட்டு அப்புறமா செய்யறேன்."

"ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியாவா சமைப்பே? கேஸ், சாமான்கள் எல்லாம் அதிகமா செலவாகாது? உனக்கும்தானே கஷ்டம்?"

அறிந்தோ அறியாமலோ தன் நலத்தில் அக்கறை காட்டிப் பேசிவிட்ட தன் மாமியாருக்கு மனதளவில் நன்றி தெரிவித்தாள் பிரியா.

"என்ன செய்யறது அத்தை? அவரு இன்னிக்கு சீக்கிரமா கிளம்பணுமாம். அதனாலதான் அவருக்கு சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பலாம்னுட்டு முதல்ல அவருக்கு மட்டும் கொஞ்சமா செய்யறேன்."

"அவன் இப்படித்தான் சில சமயம் சீக்கிரம் கிளம்புவான். கல்யாணத்துக்கு முன்னே எல்லாம் அவன் தான் வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொல்லுவான். அதனால நான் எதுவும் செய்ய மாட்டேன்."

"இப்பவும் அப்படித்தான் சொன்னார் அத்தை. நான்தான் வெளியில சாப்பிட்டு அவரு உடம்பைக் கெடுத்துக்கக் கூடாதுன்னு அவரை வற்புறுத்தி சாப்பாடு கொடுத்து அனுப்பறதாச் சொன்னேன்."

'என் பிள்ளை மேல் எனக்கு இல்லாத அக்கறை இவள் புருஷன்  மீது இவளுக்கு இருக்கிறதாக்கும்!' என்ற இயல்பான 'மாமியார் சிந்தனை' பத்மாவின் மனதில் எழுந்தாலும்,  தன் மகனின் உடல் நலத்தில் மருமகள் காட்டும் அக்கறையை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆயினும் மாமியாரின் பந்தாவை விட்டுக் கொடுக்க விரும்பாமல், "எந்த சந்தர்ப்பத்திலும் சாமிக் குத்தம் வர விடக் கூடாது. நம்ப குடும்பத்தில சாமி கும்பிடறது ரொம்ப முக்கியம். குளிச்சுட்டு சாமிக்கு விளக்கேத்திக் கும்பிட்டப்பறம்தான் சமையல், சாப்பாடு எல்லாம். சாமிக்கு அப்புறம்தான் மனுஷங்க. அது அரசனா இருந்தாலும் சரி, புருஷனா இருந்தாலும் சரி" என்று ஒரு சொற்பொழிவு ஆற்றி விட்டுச் சென்றாள்.

'அரசனைக் கவனிக்க ஆயிரம் சேவகர்கள் இருப்பார்கள். என் புருஷனை நான்தானே கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் பிரியா.

கணவன் கிளம்பிச் சென்ற பிறகு பிரியா குளித்து விட்டு வந்தபோது, அவள் மாமியார் வற்றல் பிழிவதற்காகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

"என்ன அத்தை, வற்றல் பிழியப் போறோமா  இன்னிக்கு?"

"ஆமாம். சீக்கிரம் வா. இப்பவே பிழிஞ்சு காய வச்சாத்தான் நல்லா காயும்."

"இன்னிக்கு மழை வரும் போல இருக்கே?"

"சித்திரையில ஏதுடி மழை? அதுதான் வெய்யில் காயுதே? வெய்யில் கொஞ்சம் மந்தமா இருக்கறதனால மழை வரும் என்கிறாயா? கண்டிப்பா வராது. கொஞ்ச நேரத்தில வெய்யில் கொளுத்த ஆரம்பிச்சுடும் பாரு."

அவர்கள் இருவரும் மொட்டை மாடிக்குப் போய் வற்றல் பிழிய ஆரம்பித்த பத்து நிமிடங்களில் 'சட சட'வென்ற பெரும் தூற்றலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

பொருள்:
கணவனையே தெய்வமாக நினைத்து வழிபடும் பெண் 'பெய்' என்று சொன்னால் மழை பெய்யும்.

(குறிப்பு: இந்தக் குறளின் பொருளை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் 'கணவனை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் பெண் ‘மழை பெய்யும்’ என்று சொன்னால் அவள் வாக்கு பலிக்கும் என்ற உட்பொருளின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












No comments:

Post a Comment