About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 2, 2017

80. ஆனந்தின் சந்தேகம்!

ஆனந்த் மானேஜருக்கு ஃபோன் செய்தான்.

"சார் வேலையெல்லாம் முடிஞ்சு போச்சு..."

"வேலையெல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நீயே எப்படித் தீர்மானிக்க முடியும்?"

"சார்! நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்."

"அப்படிச் சொல்லு. நீ இனிமே ஆஃபீசுக்கு வந்தா லேட்டாயிடும். அங்கேயே இன்னொரு வேலை இருக்கு..."

"சார். மணி ஆறு ஆயிடுச்சு."

"மணி ஆறுதானே ஆகுது? நீ தினமும் ஆஃபீசிலேருந்து ஏழரை மணிக்கு மேலதானே வீட்டுக்குக் கிளம்புவே? அங்க ஒரு கலெக்‌ஷன்  இருக்கு. ஆறுமுகசாமி இன்னிக்கு செக் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கிக்கிட்டு அப்பிடியே வீட்டுக்குப் போயிடு."

"சார் அது இங்கேயிருந்து ரொம்ப தூரம் சார்!"

"நடந்தா போகப்போற? பஸ்ஸிலதானே போகப் போற?"

"அதில்ல சார். எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லே. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும். அதனால இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு  காலையிலேயே உங்ககிட்ட சொல்லியிருந்தேன்!"

"ஆமாம். வேலையை முடிச்சுட்டுப் போன்னு சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்!"

"சார்! டாக்டர் எட்டு மணி வரையிலும்தான் சார் இருப்பாரு. நான் இப்பவே கிளம்பினாத்தான் எங்கம்மாவை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்ட முடியும்."

"உங்கம்மாவுக்கு என்ன ஜுரம்தானே? இதெல்லாம் ஒரு உடம்பா?"

"சார்! அவங்க வயசானவங்க. மூணு நாளா ஜுரம் குறையவே இல்லை."

"ஏம்ப்பா? உங்கம்மா ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லையே? ஒரு ஆட்டோவைப் புடிச்சுக்கிட்டு அவங்களால போயிட்டு வர முடியாது? வேணும்னா அக்கம்பக்கத்தில் யாரையாவது துணைக்குக் கூப்பிட்டா, வந்துட்டுப் போறாங்க!"

"சரி சார்."

அம்மாவுக்கு ஃபோன் செய்து பக்கத்து வீட்டு அம்மாளை அழைத்துக்கொண்டு போகும்படி சொன்னான். நல்லவேளை! மொபைல் ஃபோன் என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லாவிட்டால் இந்த மானேஜர் போன்ற அரக்க ஜென்மங்களின் இரக்கமற்ற செயல்களைச் சமாளிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும்.

வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது ஆகி விட்டது. அம்மா இன்னும் வரவில்லை. டாக்டரின் நேரம் எட்டு வரைதான் என்றாலும் எட்டு மணி வரை வரும் நோயாளிகளுக்கு டோக்கன் கொடுத்து பத்து மணிக்கு மேல் ஆனாலும் எல்லோரையும் பார்த்து விட்டுத்தான் போவார். அவர் பணத்துக்காக இதைச் செய்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் வாங்குவது மிகக் குறைந்த கட்டணம்தான்.

அவன் மானேஜரைப் போன்றவர்கள் இருக்கும் உலகத்தில்தான் இந்த டாக்டர் போன்றவர்களும் இருக்கிறார்கள்!

பக்கத்து வீட்டில் சாவி வாங்கப் போனபோது பக்கத்து வீட்டுக்காரர் தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"சார்! உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் என்னால் நிறையத் தொந்தரவு" என்றான் ஆனந்த் வருத்தத்துடன்.

"என்னப்பா இது? இது மாதிரி சின்ன உதவி கூடச் செய்யலேன்னா எப்படி? கவலைப்படாதே. நம்ம டாக்டர் மருந்து கொடுத்தா உங்கம்மாவுக்கு ஜுரம் சட்டுனு குறைஞ்சுடும்."

தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர் 'ஆத்மா' என்று அடிக்கடி சொல்வதை ஆனந்த் கவனித்தான்.

"ஏன் சார் ஆத்மான்னு ஒண்ணு இருக்கா?"

"அதில என்ன சந்தேகம்? நம்ம உடம்புக்குள்ள அடுக்கடுக்காய்ப் பல விஷயங்கள் இருக்கு. தோல், அப்புறம் சதை, அப்புறம் எலும்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்கள்னு. அதுபோல இதயம் நுரையீரல்னு பல உறுப்புகள். எல்லாத்துக்கும் உள்ளே ஆத்மான்னு ஒரு சக்தி இருக்கு."

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். எனக்கென்ன தெரியும்? ஆனா சில பேருக்கு தோல், எலும்பு இதையெல்லாம் தாண்டி இதயம்னு ஒண்ணு  இருக்கான்னே சந்தேகமா இருக்கு!"

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவர் அவனைப் பார்த்தார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
            அதிகாரம் 8             
அன்புடைமை 
குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:
அன்புவழி நடப்பதே உயிர் உள்ள உடலின் இயல்பு. அன்பு இல்லாதவரின் உடல் எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட (உயிரற்ற) வெற்றுடம்புதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















2 comments:

  1. "இதயம்னு " - நீங்க விசால மனதை, அன்பு வழியும் மனதைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். எல்லோரும் சொல்வதுபோல், மனதை, 'இதயம்'னு சொல்லியிருக்கீங்க. வள்ளுவர் சொன்ன 'என்புதோல் போர்த்திய உடம்பில்' இதயமும் அடக்கம் ஆனால் அன்பு மனம்தான் இல்லை.

    ReplyDelete
  2. என்புதோல்போர்த்திய உடம்பு என்ற சொற்றடர் உணர்ச்சிகள் இல்லாத உடலைக் குறிக்கிறது என்று சொல்லலாம். இரக்கம் இல்லாதவனை 'உனக்கு இதயமே இல்லையா?' என்று கேட்பது வழக்கில் உள்ளதுதானே? நன்றி.

    ReplyDelete