About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, February 6, 2018

128. ஒரு சொல்

"வேற ஏதாவது வேணுமா?" என்றாள் சுமதி.

"வேண்டாம்மா" என்றாள் பார்வதி.

"கொஞ்சம் காலைப் புடிச்சு விடட்டுமா?"

"அரை மணி நேரம் முன்னாலதானே புடிச்சு விட்ட? எத்தனை நேரம்தான் பிடிச்சு விடவே பாவம்! எனக்கு ஒரு பொண்ணு இருந்தா கூட இப்படிச் செய்ய மாட்டா!" என்று பார்வதி சொல்லும்போதே அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

"உடம்பு சரியில்லேன்னா யாராவது உதவி செஞ்சுதானே ஆகணும்? எங்கம்மாவா இருந்தா நான் செய்ய மாட்டேனா?" என்றாள் சுமதி.

பார்வதிக்குத் தன் மருமகளைக் கையெடுத்துக் கும்பிடலாம் போல் இருந்தது. நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவள், பல வருடங்களாகத் தொல்லை கொடுத்து வந்த கால்வலி ஆறு மாதம் முன்பு தீவிரமடைந்ததால் நடக்க முடியாமல் போய்ப் படுத்த படுக்கையாகி விட்டாள்.

மருமகள் சுமதிதான் மாமியாரை எழுந்து உட்கார வைத்துச் சாப்பாடு கொடுப்பது முதல், பலமுறை அவளைக் கையைப் பிடித்து மெல்லத் தாங்கியபடி குளியலறைக்கு அழைத்துச் செல்வது வரை எல்லாற்றையும் முகம் சுளிக்காமல் செய்து வந்தாள். 

பார்வதி தடுத்தும் கேட்காமல், கொஞ்சம் இதமாக இருக்கட்டுமே என்று அவ்வப்போது அவள் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டும் இருந்தாள்.

பார்வதியின் மகன் பூபதி கூட அலுவலகத்திலிருந்து வந்ததும் ஒருமுறை அவளை வந்து பார்த்து விட்டு "என்னம்மா, எப்படி இருக்கு இப்ப?" என்று விசாரித்து விட்டுப் போவதோடு சரி. 

ஆனால் சுமதி அடிக்கொரு முறை அறைக்குள் வந்து பார்வதியைப் பார்த்து விட்டு, அவளுக்கு வேண்டியவற்றைச் செய்து விட்டுப் போவாள்.

சுமதி வரவேற்பறையில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் தோழி சகுந்தலா வந்தாள். இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"உன் மாமியார் எப்படி இருக்காங்க இப்ப?" என்றாள் சகுந்தலா.

"அப்படியேதான் இருக்காங்க. இம்ப்ரூவ்மென்ட் எதுவும் இல்லை."

"நீதான் அவங்களை கவனிச்சுக்கற போலருக்கு?"

"ஆமாம்."

"இப்ப என்ன பண்றாங்க? நான் போய்ப் பாக்கலாமா?" என்றாள் சகுந்தலா.

"தூங்கிக்கிட்டிருக்காங்க. பாக்கறதுன்னா பாரு."

"வேண்டாம். இன்னொரு தடவை வந்து அவங்க முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவங்களைப் பாத்துப் பேசிட்டுப் போறேன். பாவம்! ரொம்பக் கஷ்டப்படறாங்க போலருக்கு!"

"ஆமாம். என்ன பாவம் பண்ணினங்களோ தெரியல, இப்படித் தானும் கஷ்டப்பட்டுக்கிட்டு, மத்தவங்களை'யும் கஷ்டப்படுத்தறாங்க!" என்றாள் சுமதி.

சகுந்தலா விடைபெற்றுப் போன பிறகு சுமதி மாமியாரின் அறைக்குச் சென்றாள். 

கண்ணை மூடிப் படுத்திருந்த மாமியாரின் கால்களை சுமதி பிடித்து விட முயன்றபோது, பார்வதி சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள். பொதுவாக அவளால் கால்களை அவ்வளவு வேகமாக நகர்த்த முடியாது. அதிகம் வலித்திருக்கும்!

கண்ணை விழித்து சுமதியைப் பார்த்து "வேண்டாம்மா! ஏற்கெனவே நான் நிறைய பாவம் பண்ணியிருக்கேன். நீ வேற உன் கை வலிக்க என் காலைப் புடிச்சு விட்டு, அந்தப் பாவத்தை வேற நான் சம்பாதிச்சுக்க வேண்டாம்" என்றாள்.

தான் சகுந்தலாவிடம் பேசியது மாமியாரின் காதில் விழுந்திருக்குமோ என்ற சிந்தனையுடன் மாமியாரின் முகத்தைப் பார்த்தாள் சுமதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்றாகா தாகி விடும்.

பொருள்:  
ஒருவர் சொல்லும் ஒரு கடிய சொல்லின் விளைவாக அவர் செய்யும் நல்ல விஷயங்கள் பயனற்றுப் போய் விடும்.
  குறள் 127 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

























No comments:

Post a Comment