About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, February 16, 2018

132. திருட்டும் 'புரட்டும்'

மெட்ரோ ரயிலில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் முகம் தெரிந்த முகமாகத் தோன்றியது. 

எங்கே பார்த்திருக்கிறோம் இவரை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, "நீங்க அருணாசலம்தானே?" என்று அவரே கேட்டு விட்டார்.

"ஆமாம். ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியலியே!" என்றேன்.

"என் பேரு கணேசன். உங்களோட ஸ்கூல்ல படிச்சவன்" என்றார் அவர் தயக்கத்துடன்.

எனக்கு உடனே நினைவு வந்து விட்டது. கணேசனின் தயக்கத்துக்கான காரணமும் புரிந்தது.

"டேய் கணேசா! எப்படிரா இருக்கே?" என்றேன் பள்ளி நாட்களின் சுவாதீனத்துடன்.

"நல்லா இருக்கேன்" என்றான் கணேசன். இப்போதும் அவன் பேச்சில் ஒரு இறுக்கம் தெரிந்தது.

நான் போக வேண்டிய இடம் வேறு என்றாலும் அவன் இறங்கிய ஸ்டேஷனிலேயே நானும் இறங்கிக் கொண்டேன். எனக்கு வெட்டி முறிக்கிற வேலை எதுவும் இல்லையே!

ஒரு ஓட்டலில் சென்று அமர்ந்து கொண்டோம்.

கணேசனும் நானும் ஒரே வகுப்பில்தான் படித்தோம். அப்போது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கணேசன் ரகு என்ற மாணவனுடைய பேனாவைத் திருடி விட்டான் என்று ஒரே பரபரப்பு. கணேசனைத் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துப் போனார்கள். அப்புறம் அவனை நான் பார்க்கவேயில்லை. அவன் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.

"திருட்டு புத்தி உள்ளவங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்காதே!' என்று என் அப்பா கண்டிப்பாகச் சொல்லி விட்டதால் கணேசன் வீட்டு விலாசத்தைக் கேட்டறிந்து அவனைப் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை நான் கைவிட்டு விட்டேன்.

கணேசன் போன்ற ஒரு நெருங்கிய நண்பனைப் பிரிந்தது பற்றி நான் பல நாட்கள் வருந்தி இருக்கிறேன். அவன் பேனாவைத் திருடி இருப்பான் என்று என்னால் நம்ப முடியவில்லை.

ஓட்டலில் அமர்ந்திருந்தபோதும் கணேசன் அதிகம் பேசவில்லை. பழையதை நினைத்து அவமானமாக உணர்வது போல் இருந்தான்.

"டேய் கணேசா! நீயும் நானும் எப்பவுமே ஃபிரண்ட்ஸ்தாண்டா! நீ பேனாவைத் திருடியிருப்பேன்னு நான் அப்பவும் நினைக்கல, இப்பவும் நினைக்கல. நீ எங்கிட்ட பழையபடி ஃப்ரீயா இருக்கலாம்" என்றேன்.

"இல்லடா! நான் திருடினது உண்மைதான்" என்றான் கணேசன்.

நான் சற்று வியப்புடன் அவனைப் பார்த்தேன். ஆனால் அவன் திடீரென்று உற்சாகமாக மாறி விட்டான்.

"நீ என்னை வெறுத்து ஒதுக்கியிருப்பியோன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா நீ என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கியே! அதனால உங்கிட்ட உண்மையைச் சொன்னா நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன். உனக்குத் தெரியும். அந்தக் காலத்துல நாங்க கொஞ்சம் கஷ்டப்படற குடும்பமாத்தான் இருந்தோம்.

"அப்பல்லாம் நாம ஒரு பேனாவை ரெண்டு மூணு வருஷம் கூட வச்சுப்போம். இப்ப தினம் நாலு பால்பாயிண்ட் பேனாவைத் தொலைக்கறோம். நெனச்சுப் பாத்தா ஆச்சரியமா இருக்கு. அப்பல்லாம் பேனாவைத் தொலைச்சா ஏதோ சொத்தே போயிட்ட மாதிரி பெரிய விஷயமா இருக்கும்!

"என் பேனா தொலைஞ்சு போச்சு. எங்கப்பா கிட்ட சொல்றதுக்கு பயமாவும் தயக்கமாவும் இருந்தது. இன்னொரு பேனா வாங்கிக் கொடுக்கறது எங்கப்பாவுக்கு ஒரு சுமையாத்தான் இருந்திருக்கும். ரகு பணக்காரப் பையன். அடிக்கடி பேனாவை மாத்திக்கிட்டே இருப்பான். அவனோட பேனாவை அவன் பாக்காதபோது எடுத்துட்டேன். அவன் அதைப் பெரிசா நெனைக்க மாட்டான்னு நெனச்சேன். ஆனா அவன் அவனோட பேனா எங்கிட்ட இருக்கறதைப் பாத்துட்டு, கிளாஸ் டீச்சர் கிட்ட கம்ப்ளெயின் பண்ணிட்டான்.

"கிளாஸ் டீச்சர் ஹெட்மாஸ்டர் கிட்ட சொல்ல, ஹெச் எம் எங்கப்பாவைக் கூப்பிட்டு அனுப்பி, என்னையும் தன்னோட ரூமுக்குக் கூப்பிட்டு விசாரிச்சு, என்னையும் எங்கப்பாவையும் ரொம்ப இழிவாப் பேசி அவமானப்படுத்திட்டாரு. வீட்டுக்குப் போனதும் எங்கப்பா எங்கிட்ட ஒண்ணுமே சொல்லல. நானேதான் வேற ஸ்கூல்ல படிக்கறேன்னு சொல்லி ஸ்கூலை மாத்திக்கிட்டேன். அந்த ஸ்கூல் என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம். தினம் ரெண்டு மைல் நடக்கணும். அப்படி தினம் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்து போறதுல நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கற மாதிரி ஒரு திருப்தி இருந்தது."

கணேசனின் கண்களின் ஓரத்தில் இலேசாக ஈரம் படர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

"விட்டுத் தள்ளுடா! சின்ன வயசில செஞ்ச தப்பு அது!" என்றேன்.

"சின்ன வயசில யோசிக்காம அப்படி ஒரு காரியம் பண்ணி எனக்கும் என் அப்பாவுக்கும் அவமானத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்தது என்னை ரொம்பவும் பாதிச்சுடுச்சு. இனிமே வாழ்க்கையில ஒரு சின்னத் தப்பு கூடப் பண்ணாம, ஒழுக்கமா நேர்மையா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அது மாதிரியே வாழ்ந்துக்கிட்டிருக்கேன்."

"ஓ, ரொம்ப நல்ல விஷயம்" என்றேன் பாராட்டுமுகமாக.

"ஆமாண்டா. நான் இப்ப ஒரு கம்பெனியில பர்ச்சேஸ் மேனேஜரா இருக்கேன். வேடிக்கை என்னன்னா, மொதல்ல அட்மினிஸ்ட்ரேஷன்லதான் இருந்தேன். பர்ச்சேஸ் மானேஜரா இருந்தவரு நிறைய கமிஷன் வாங்கினார்னு கண்டு பிடிச்சு அவரை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. பர்ச்சேஸில ஒரு நேர்மையான ஆளைப்  போடணும்னுட்டு, என்னைப் போட்டிருக்காங்க!"

சொல்லும்போதே கணேசனிடம் ஒரு பெருமிதம் தெரிந்தது. ஒரு தவறு செய்து விட்டு, அதைத் திருத்திக்கொண்டு, சரியான பாதையில், சிறிது கூட ஒழுங்கு தவறாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பெருமிதம்.

"எங்கப்பா என்னோடதான் இருக்காரு. என்னைப் பத்தி அவருக்கு ரொம்பப் பெருமை. எனக்கு இது போதும். ஒரு விதத்தில நான் பண்ணின தப்பே எனக்கு நல்லதா அமைஞ்சுடுச்சு. நான் பண்ணின திருட்டு என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சுன்னு சொல்லலாம். இங்கிலீஷில 'பிளஸ்ஸிங் இன் டிஸ்கைஸ்'னு சொல்லுவாங்க."

"நீ உண்மையிலே ரொம்பப் பெரியவன்தாண்டா! ஒரு சின்ன சறுக்கலையே எஸ்கலேட்டர் மாதிரி பயன்படுத்தி மேல போயிட்ட!" என்றேன் நான் மனப்பூர்வமான பாராட்டுணர்வுடன்.

"அது சரி. நீ என்ன பண்றே?" என்றான் கணேசன்.

"நான் ஒரு பாங்க்ல ஒர்க் பண்ணிட்டு வி ஆர் எஸ் வாங்கிட்டேன். இப்ப சும்மாதான் இருக்கேன்" என்றேன்.

கணேசனுக்கு மாறாக, ஆரம்பத்தில் தவறு ஏதும் செய்யாமல் வளர்ந்த நான் ஒரு வங்கி அதிகாரியாகப் பணி  செய்தபோது, பேராசையாலும், யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு தைரியத்தாலும் உந்தப்பட்டுப் பண மோசடி செய்து அது கண்டு பிடிக்கப்பட்டதால் வேலையை இழந்து மூன்று வருடம் சிறைக்கும் சென்று வந்த விவரங்களை என் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு தைரியம் இல்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை.

பொருள்:  
ஒழுக்கத்தை கவனத்துடன் பேணிக் காக்க வேண்டும். வாழ்க்கையில் பலவற்றைக் கற்றறிந்த நிலையிலும் ஒழுக்கம்தான் நமக்குத் துணை நிற்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                             காமத்துப்பால்





















No comments:

Post a Comment