About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, March 23, 2018

140. குறை ஒன்று உண்டு கண்ணா!

"அசோசியேஷன் மீட்டிங்குக்கு நான் எதுக்கு வரணும்?" என்றான் கண்ணன்.

"எல்லாரையும் பாத்துப் பழகறதுக்கு இது ஒரு சந்தர்ப்பம்" என்றாள் அவன் மனைவி வசந்தி.

"நீ மட்டும் போயிட்டு வா."

"ஒரு அஞ்சு நிமிஷம் வந்து ஒக்காந்துட்டுப் போயிடுங்க."

அரைமனதாக ஒப்புக் கொண்டான் கண்ணன்.

அந்தக் குடியிருப்பில் அவர்கள் சமீபத்தில்தான் வீடு வாங்கிக்கொண்டு குடி போயிருந்தார்கள். வசந்தி அங்கிருந்த பலரிடமும் பழகிப் பரிச்சயமாகி விட்டாள். 

ஆனால் கண்ணன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூடப் பேசியதில்லை. வெளியே போகும்போது யாராவது பார்த்துப் புன்னகை செய்தாலோ, தலையாட்டினாலோ கூட, கவனிக்காமல் எங்கேயோ பாத்தபடி போய்க் கொண்டிருப்பான்.

கண்ணன் உயிரியல் துறையில் பட்ட மேற்படிப்புப் படித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளனாகப் பணி செய்து வந்தான்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஏதாவது படித்துக் கொண்டோ மடிக்கணினியில் வேலை செய்து கொண்டோ இருப்பான். வசந்தி ஏதாவது கேட்டால் பதில் சொல்வான். அவனாக அதிகம் பேச மாட்டான்.

சில சமயம் பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ வந்த சுவையான விஷயத்தை வசந்தி அவனுடன் பகிர்ந்து கொண்டால் கேட்டுக் கொள்வான். அது கூட அவள் திருப்திக்காகத்தான் செய்கிறானே தவிர அவனுக்கு அவற்றில் ஈடுபாடு இல்லை என்பதை வசந்தி உணர்ந்திருந்தாள். சினிமா, ஷாப்பிங், உறவினர்கள் வீடு என்று எங்காவது போக வேண்டும் என்று வசந்தி சொன்னால் அவளுடன் போவான்.

தன் கணவன் யாருடனும் பழகாமல் ஒதுங்கியே இருப்பது வசந்திக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. அலுவலகத்திலும் அப்படித்தான் என்று அவனுடைய நண்பன் சீனு சொல்லி இருக்கிறான். கண்ணனுக்கு நண்பன் என்று சொல்லிக்கொள்ள சீனு மட்டும்தான் உண்டு. ஏதோ ஒரு நண்பராவது இருக்கிறாரே என்று நினைத்துக் கொள்வாள் வசந்தி.

அந்தக் குடியிருப்பில் இருந்த 72 வீடுகளுக்கும் பொதுவான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அசோஸியேஷனின் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் கண்ணனை அழைத்தாள் வசந்தி.

சோசியேஷன் கூட்டம் அரைமணியிலேயே முடிந்து விட்டது. இப்போது செயலாளராக இருப்பவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக விரும்பினார். புதிதாக ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுக்கத்தான் கூட்டம் அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் செயலாளராகப் பொறுப்பேற்க யாரும் முன்வராததால் கூட்டம் சீக்கிரமே முடிந்து விட்டது.

வீட்டுக்கு வந்ததும், "ஏங்க? நீங்க ஏன் செகரெட்டரியா பொறுப்பேத்துக்கக் கூடாது?" என்றாள் வசந்தி.

"என்ன ஒளறர? நான் எப்படி இதெல்லாம் பாத்துக்க முடியும்?" என்றான் கண்ணன்.

"ஏன் முடியாது? நீங்க நிறையப் படிச்சவரு. புத்திசாலி. எதையும் நல்லா யோசிச்சு செய்யக் கூடியவரு. இது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமான வேலை இல்ல. சில பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் சரி பண்ணிட்டா அப்புறம் எல்லாம் ஒழுங்காப் போகும். உங்களால இந்தப் பிரச்னையை எல்லாம் சுலபமாத் தீர்த்து வைக்க முடியும்."

"உனக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யார்கிட்டயும் அதிகமாப் பழக மாட்டேன். என்னால எப்படி இந்தப் பொறுப்பை ஏத்துக்க முடியும்?"

"நீங்க எல்லார்கிட்டயும் பழகணும்கறதுக்காகத்தான் நான் உங்களை இந்தப் பொறுப்பை எடுத்துக்கச் சொல்றேன். உங்களுக்குத் தெரியாதது இல்ல. இவ்வளவு படிச்சிருக்கிற நீங்க மத்தவங்களோட பழகாம ஒதுங்கி இருக்கிறது ஒரு குறை இல்லையா? இந்தக் குறையை நீங்க போக்கிக்க வேண்டாமா? நீங்க செகரெட்டரியாப் பொறுப்பு எடுத்துக்கிட்டா எப்படியும் பல பேரோட பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அதுக்கப்பறம் உங்ககிட்ட இருக்கிற இந்தக் குறை உங்களை அறியாமலே உங்களை விட்டுப் போயிடும்" என்றாள் வசந்தி.

ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்த கண்ணன் "ஓகே பாஸ்! உங்க உத்தரவுப்படியே செய்யறேன்" என்றான் சிரித்துக் கொண்டே. மாற்றம் அவனிடம் அப்போதே துவங்கி விட்டதாக வசந்திக்குத் தோன்றியது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 
கல்லார் அறிவிலா தார்

பொருள்:  
உலகத்தோடு பொருந்தி நடந்து கொள்ளும் கலையைக் கற்காதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள் என்றே கருதப்படுவர். ('உலகம்' என்ற சொல் உலகில் உள்ள உயர்ந்தவர்களையே குறிக்கும் என்பது தொல்காப்பிய இலக்கணம் ('உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.') எனவே இந்தக் குறளுக்கு 'உலகில் உள்ள உயர்ந்த மனிதர்களோடு பொருந்தி வாழ்தல்' என்றே பெரும்பாலும் பொருள் கூறப்பட்டிருக்கிறது. நான் இங்கே பொதுவாக உலகில் மற்றவர்களுடன் பழகுவது என்று எளிமையாகப் பொருள் கொண்டிருக்கிறேன். இன்றைய உலகில், உயர்ந்தவர்கள் யார் என்று கண்டறிவதே கடினமான செயல் அல்லவா?)
பொருட்பால்                                                                                             காமத்துப்பால்






















2 comments: