About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 3 - நீத்தார் பெருமை

திருக்குறள் 
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை
(நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி 
நெறியோடு வாழ்பவர்)

21. என்னை ஏன் ஒதுக்கினீர்கள்?

"யாருங்க ஃபோன்ல? இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?" என்றாள் சிவகாமி

"ஸ்வாமிஜி நம்ம ஊருக்கு வரப்போறாராம்" என்றார் தர்மராஜ்

"நம்பவே முடியலியே! அவரு டில்லியை விட்டு  எங்கேயும் போக மாட்டாரே?"

"நம்ம ஊர்ல மத ஒற்றுமை மாநாடு நடக்கப் போகுது. அதுல கலந்துக்கறதுக்காகத்தான் வராறாம்."

"உங்களுக்கு யார் ஃபோன் பண்ணினாங்க?"

"ஸ்வாமிஜியோட பி.ஏ.தான் பண்ணினாரு. மூணுநாள் மாநாடு. மாநாட்டுக்கு முந்தின நாளே ஸ்வாமிஜி வந்துடுவாராம். மாநாடு முடிஞ்சு அடுத்த நாள் ஊருக்குக் கிளம்புவாராம். அஞ்சு நாள் நம்ம ஊர்லதான் இருக்கப் போறாரு."

"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நாம அடிக்கடி டில்லிக்குப் போயி அவரைப் பாத்துட்டு வரோம். அவரே நம்ம ஊருக்கு வந்து அஞ்சு நாள் தங்கறது நம்மளோட அதிர்ஷ்டம்தான். ஆமாம் நம்ம வீட்டிலதானே தங்கப் போறாரு?"

"அதைப் பத்தி பி.ஏ. ஒண்ணும் சொல்லலே. விவரங்களை அப்புறம் சொல்றேன்னு சொன்னாரு. அடுத்த மாசம்தானே நிகழ்ச்சி? அப்புறம் சொல்லலாம்னு நெனைச்சிருப்பாரு. இந்த ஊர்ல பெரிய வீடு நம்மளோடதுதானே? இங்கதான் தங்குவாரு."

"ஒரு வேளை  நிகழ்ச்சியை நடத்தறவங்க ஏதாவது ஏற்பாடு செஞ்சிருப்பாங்களோ?"

"இருக்கலாம். ஆனா ஸ்வாமிஜி நம்ம வீட்டுல தங்கத்தான் பிரியப்படுவாருன்னு நெனைக்கிறேன்" என்றார் தர்மராஜ்.

ஸ்வாமிஜி வருவதற்கு ஒரு வாரம் முன்பு  தர்மராஜ் ஸ்வாமிஜியின் பி.ஏக்கு ஃபோன் செய்து கேட்டார். "என்ன சார், ஸ்வாமிஜி நம்ம வீட்டுலதானே தங்கறாரு? உங்ககிட்டேயிருந்து தகவல் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். ஒண்ணும் வராததாலதான் ஃபோன் பண்றேன்."

"ஓ, சாரி! போன தடவை ஃபோன் செஞ்ச போதே சொல்லி இருக்கணும். மறந்துட்டேன். ஸ்வாமிஜி உங்க ஊர்ல இருக்கிற வள்ளிமுத்துங்கற பக்தர் வீட்டிலதான் தங்கப்போறாரு."

"வள்ளிமுத்து வீட்டிலேயா? அவர் வீடு ரொம்ப சின்னது. ஏ.சி. கூடக் கிடையாது. வசதி இருந்தும் கஞ்சத்தனமா வாழற மனுஷன்! அவர் வீட்டில போய் ஸ்வாமிஜி எப்படித் தங்குவாரு?"

"நீங்க கஞ்சத்தனம்னு சொல்றதை ஸ்வாமிஜி எளிமை என்று நினைக்கிறாரோ என்னவோ?" என்று சொல்லி பி.ஏ. ஃபோனை வைத்து விட்டார்.

காநாடு முடிந்து ஸ்வாமிஜி ஊருக்குக் கிளம்புமுன், தர்மராஜ் வள்ளிமுத்து வீட்டில் போய் அவரைப் பார்த்தார். அவரிடம் தனிமையில் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தனது ஆதங்கத்தை வெளியிட்டார். "ஸ்வாமிஜி. நான் உங்களோட நீண்ட நாள் பக்தன். என் விட்டில நீங்க தங்காதது எனக்குக் குறைதான்" என்றார்.

ஸ்வாமிஜி சிரித்துக்கொண்டே, "தர்மராஜ்! நீ மகாபாரதம் படித்திருக்கிறாயா?" என்றார்.

"ஓரளவுக்குக் கதை தெரியும்."

"கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்துக்கு வந்தபோது பீஷ்மர், துரோணர், துரியோதனன் போன்றவர்கள் அவர் தன் வீட்டில்தான் தங்குவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கிருஷ்ணர் விதுரரின் குடிலில்தான் போய்த் தங்கினார்."

"நான் என்ன துரியோதனன் மாதிரி மோசமானவனா?"

"பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்தான். அவர்களை விட்டு விட்டு விதுரரைக் கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார் என்றால் அதற்குக் காரணம் விதுரரின் எளிமையும் பற்றற்ற தன்மையும்தான். நீ நல்லவன்தான். உன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. நீ உன் செல்வத்தைப் பல நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கிறாய். என் மீது உனக்கு உண்மையான ஈடுபாடு உண்டு. அதனால்தான் நானும் உன்னை மதிக்கிறேன். நான் இங்கே வரப் போவதை முன்பே உனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்ததும் உன் மேல் நான் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தினால்தான்."

"ஆனால் என் வீட்டில் தங்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டதே ஸ்வாமிஜி?"

"விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் என் முதல் விருப்பம் வள்ளிமுத்துவின் வீடுதான். அவனும் உன் போல் வசதி படைத்தவன்தான். ஆனால் பணத்தினால் கிடைக்கக்கூடிய வசதிகளை ஒதுக்கி விட்டு எளிமையாக வாழ்கிறான். அவன் வீட்டில் ஏ.சி. இல்லைதான். டில்லியில் என் ஆசிரமத்தில் பல ஏ.சி அறைகள் இருந்தாலும் என் அறையில் ஏ.சி கிடையாது என்பதை நீ கவனித்திருப்பாய்.

"என் போன்ற துறவிகள் வள்ளிமுத்து போன்ற துறவு மனப்பான்மை உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதானே இயல்பு? அடுத்த  முறை வரும்போது நிச்சயம் உன் வீட்டில் தங்கிக் கொள்கிறேன். நீயும் சில வசதிகளையாவது துறந்து சற்று எளிமையாக வாழப் பழகிக் கொள். துறவு மனப்பான்மை நம்மை இறைவன் அருகில் கொண்டு சேர்க்கும்.

"துறவு என்றால் குடும்பத்தைத் துறந்து விட்டுக் காஷாயம் அணிந்து கொள்வது என்று பொருள் அல்ல. இவ்வுலக வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுகங்கள் சிலவற்றையாவது துறக்க வேண்டும் என்றுதான் பொருள். உனக்கும் உன் குடும்பத்துக்கும் என் நல்லாசிகள்" என்றார் ஸ்வாமிஜி.

குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்:
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையே உயர்ந்தது என்பது நூல்கள் கண்டு சொல்லும் உண்மை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே!

வங்கியில் கூட்டம் அதிகம் இல்லை. சேமிப்புக் கணக்குப் பிரிவுக்கு முன் அந்தப் பெரியவர் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, "என்னோட பாஸ் புக் என்ட்ரி போடக் கொடுத்திருந்தேனே?" என்று பணிவாகக் கேட்டார். தடுப்புக்குப் பின்னிருந்த இளைஞனுக்குக் கோபம் வந்து விட்டது.

"இங்க பாருய்யா, இந்த மாதிரி பிஸியான நேரத்தில பாஸ் புக் என்ட்ரி போடச் சொல்றதே தப்பு. அதிலேயும் ஒரு அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ண முடியாம இப்படி நச்சரிக்கிறியே!"

'பெரியவர் வயதுக்குக் கூடவா மரியாதை கொடுக்கக் கூடாது?' என்று நினைத்துக் கொண்டார் பக்கத்தில் நின்ற இன்னொரு வாடிக்கையாளர். ஆனால் பெரியவர் எதுவும் சொல்லவில்லை.

ஐந்து நிமிடங்கள் கழித்து லெட்ஜரைத் திறந்து பாஸ் புக்கில் என்ட்ரி போடத் துவங்கிய அந்த இளஞன் சற்றே ஆச்சரியத்துடன்  பெரியவரைப் பாத்தான், "இது யாரோட அக்கவுண்ட்? உங்க முதலாளியோடதா?" என்றான்.

"என்னுடையதுதான்" என்றார் பெரியவர். கணக்கில் இருந்த பெருந்தொகைக்கும், அந்தப் பெரியவரின் எளிய தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைத்த இளைஞன் மௌனமாக என்ட்ரி போட்டு அவரிடம் கொடுத்தான்.

"தேங்க்ஸ்" என்றார் பெரியவர்.

இளைஞன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் மௌனமாக இருந்தான்.

பெரியவர் பாஸ் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது மானேஜர் அறையைக் கடந்துதான் போக வேண்டி இருந்தது. பெரியவரை கவனித்து விட்ட மானேஜர் எழுந்து வெளியே வந்து, "சார்! உள்ள வாங்க" என்று தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

பெரியவரிடம் பாங்க் மானேஜர் பேசிக் கொண்டிருந்தபோது பாஸ் புக் என்ட்ரி போட்டுக் கொடுத்த இளைஞன் ஒரு விளக்கம் கேட்பதற்காக மனேஜரின் அறைக்குள் வந்தான். பெரியவரைப் பார்த்ததும் சற்றுத்  தயங்கினான்.

"வாங்க பாஸ்கர்" என்று அவனை உள்ளே அழைத்த மானேஜர், அவன் உள்ளே வந்ததும், "பாஸ்கர், சார் ஒரு தொழிலதிபர். அவர் கம்பெனிக் கணக்குகள் வேறு வங்கியில் இருந்தாலும்  அவரோட எஸ் பி அக்கவுன்ட் நம்ம பாங்க்கிலதான் இருக்கு. அவர் குடும்பத்தில இருக்கறவங்களோட அக்கவுண்ட்ஸ், அதைத் தவிர நெறைய ஃபிக்ஸட் டெபாசிட் எல்லாம் வச்சிருக்கார். அவரைப் பாத்தா ஒரு கோடீஸ்வரர்னு தெரியாது. அவ்வளவு எளிமை. எல்லார்கிட்டயும் ரொம்ப மரியாதையாப் பேசுவார். அவரை ஒரு சாதாரண ஆளா நெனச்சு ஏமாந்தவங்க எத்தனையோ பேர். முதல்ல சின்னதா தொழில் ஆரம்பிக்கச்சே எப்படி இருந்தாரோ அப்படியேதான் இருக்கார் இப்பவும்! இவரைப் பத்திச் சொல்லிக்கிட்டே போகலாம். 'சார்! நீங்க பாங்க்குக்கு வர வேண்டிய அவசியமே இல்ல. உங்க டிரைவரையோ வேலைக்காரனையோ அனுப்பினா போதும்'னு நான் நெறைய தடவை  அவர் கிட்ட கேட்டுக்கிட்டுருக்கேன். ஆனா அவர் கேக்க மாட்டார்" என்றவர், பெரியவரிடம், "சார், இவர் பாஸ்கர். இப்பதான் டிரான்ஸ்ஃபர்ல நம்ம பிராஞ்சுக்கு வந்திருக்கார். இவர்தான் எஸ்.பி. அக்கவுண்ட் பாத்துக்கறார்." என்றார்.

"தெரியுமே! இப்ப கூட இவர்கிட்டதான் என்ட்ரி போட்டுக்கிட்டு வரேன்" என்று சொன்ன பெரியவர் இளைஞனைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பொருள்:
பற்றுக்களைத் துறந்து வாழ்பவர்களின் பெருமையைக் கூறுவது இவ்வுலகில் இதுவரை (பிறந்து) இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கூறுவது போல் ஆகும் (அவ்வளவு கடினமானது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை!

அசோக், குமார் இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். அசோக் படிப்பில் புலி. பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியவன். குமாரும் ஓரளவுக்கு நன்றாகப் படிப்பவன்தான். ஆனால் அசோக் அளவுக்கு இல்லை.

இருவருக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது. இருவரும் விடுதியில் தங்கிக் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினர்.

இருவரின் பெற்றோரும் அறிமுகமானவர்கள்தான். குமாரின் அப்பா அசோக்கிடம், "நீதாம்ப்பா என் பையனைப் பாத்துக்கணும்" என்றார்.

கல்லூரியில் சேர்ந்ததும் அசோக்கிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு விடுதி வாழ்க்கை அளித்த சுதந்திரத்தை அனுபவிக்கத் துவங்கிய உற்சாகத்தில் அசோக் சற்று எல்லை மீறிப் போனான். புதிய நண்பர்களுடன் சேர்ந்து சினிமா, ஊர் சுற்றுதல் என்று ஆரம்பித்த பழக்கம் சிகரெட், மது என்று விரிந்தது.

குமார் அசோக்கைப் பலமுறை எச்சரித்தும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. 

"இதெல்லாம் சின்ன விஷயம்டா. இதனால எல்லாம் யாரும் கெட்டுப் போயிட மாட்டாங்க. இந்த வயசுல இந்த ஜாலி கூட இல்லேன்னா அப்புறம் வாழ்க்கையை அனுபவிக்கவே முடியாது. நீ ஏன் இப்படிச் சாமியார் மாதிரி இருக்கேன்னு எனக்குப் புரியல!" என்றான்.

விடுமுறையில் ஊருக்கு வந்தபோது குமார் தன் அப்பாவிடம் அசோக்கின் புதிய பழக்கங்கள் பற்றித் தயக்கத்துடன் சொன்னான். 

அவர் அதிர்ச்சி அடையவில்லை. "இந்த வயசுல இது மாதிரி ஆசைகள் எல்லாம் வரும். நாமதான் எது நல்லது எது கெட்டதுன்னு சீர்தூக்கிப் பாத்து நடந்துக்கணும். உனக்கு அந்தப் பக்குவம் இருக்கு. அசோக்குக்கு இல்லாம போச்சே!" என்றார் வருத்தத்துடன். "இது தெரியாம, அசோக்தான் பக்குவமா சிந்திப்பான்னு நெனச்சு அவன்கிட்ட  உன்னைப் பாத்துக்கச் சொல்லிச் சொன்னேன்!"

"அசோக் அப்பாகிட்ட இதைப் பத்திச் சொல்லப் போறீங்களா அப்பா?"

"சொல்லணும்தான். ஆனா அவருக்கும் எனக்கும் ஓரளவுக்குத்தான் பழக்கம். அவரு தன் பிள்ளை நல்லாப் படிக்கிறதைப் பத்திப் பெருமையோட இருக்காரு. இப்ப நான் போய் இதைச் சொன்னா, பொறாமையால சொல்றேன்னு கூட நெனச்சுக்கலாம். எப்படியும் கொஞ்ச நாள்ள அவங்களுக்குத் தானாத் தெரிய வரும். நான் எதுக்கு இப்ப சொல்லி அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து அவங்களோட நமக்கு இருக்கிற நல்ல உறவையும் கெடுத்துக்கணும்?"

அசோக்கின் பெற்றோருக்கு அசோக்கின் புதிய பழக்கங்கள் பற்றிய விவரம் விரைவிலேயே தெரிய வந்தது. அசோக்கின் அறையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே வந்து அவனை விடுதியிலிருந்து அழைத்துச் செல்லும்படி அசோக்கின் அப்பாவுக்குக் கல்லூரி முதல்வரிடமிருந்து ஃபோன் வந்தது.

குறள் 23:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பொருள்:
நல்லது தீயது, இம்மை மறுமை, பிறப்பு வீடு (மோட்சம்) போன்ற இரு வகை நிலைகளை உணர்ந்து (சரியானதைத் தேர்ந்தெடுத்து)  அறவழி நடப்பவர்களின் பெருமை இவ்வுலகில் மேலோங்கி இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


24. மனதில் உறுதி வேண்டும்!

"சீடை வாங்கி வைத்திருந்தேனே தீர்ந்து விட்டதா?" என்றான் முகுந்தன்.

"போக வர இரண்டு இரண்டாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டே இருந்தால் எப்படித் தீராமல்  இருக்கும்? இந்த லட்சணத்தில் உங்களுக்கு கொலஸ்ட்ரால் வேறு! நாக்கை அடக்க முடியாவிட்டால் கொலஸ்ட்ரால் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வரும்?" என்றாள் சுனிதா.

"என்னுடைய அப்பா அம்மா உன்னுடைய அப்பா அம்மா இவர்கள் எல்லாம் கூட நொறுக்குத் தீனிக்கு அடிமைகள்தான். ஒரு புறம் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு மறுபுறம் சமோஸா, ஸ்வீட் என்று கொரித்துக்கொண்டே இருப்பார்கள். நம் குடும்பத்தில்  கட்டுப்பாட்டோடு இருப்பவர் தாத்தா மட்டும்தான் . எப்படித் தாத்தா நீங்கள் மட்டும் இவ்வளவு கட்டுப்பாடோடு இருக்கிறீர்கள்?" என்றான் முகுந்தன்.

"சாப்பாட்டு விஷயம் என்று இல்லை, எல்லா விஷயத்திலுமே நான் கட்டுப்பாட்டோடுதான் இருக்கிறேன். இதற்குக் காரணம் நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் இல்லை. இந்தப் பிறவி முடிந்ததும் இன்னொரு பிறவி வராமல் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்ற ஆசையும்தான் காரணம்" என்றார் தாத்தா.

"அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் சுனிதா.

"இருக்கிறது. யானையைப் பார்த்திருக்கிறீர்களா? அது பார்ப்பதற்கு சாதுவாகத்தான் இருக்கும். ஆனால் திடீரென்று அதற்கு வெறி பிடித்து விடும். அப்போது அங்குசத்தை வைத்து அதை அடக்குவான் பாகன். நம் ஐம்புலன்களும் யானை போல்தான். திடீர் திடீர் என்று  அந்தப் புலன்களில் ஆசை பெருக்கெடுக்கும்.  ஆசை தலையெடுக்கும்போது அதை அடக்க  மன உறுதி வேண்டும். மன உறுதிதான் ஐம்புலன்களை அடக்க மனிதனிடம் இருக்கும் அங்குசம். இந்த அங்குசத்தைப் பயன்படுத்தி ஆசைகளை அடக்கி வாழ்வதுதான் மோட்சத்துக்குப் போவதற்கு நாம் போடும் விதை. இதை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களோ என்னவோ! ஆனால் மன உறுதி இல்லாததால்தானே வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிடக் கூடாதவற்றைச் சாப்பிட்டு நீங்கள் எல்லாம் உங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதாக நீங்களே சொல்கிறீர்கள்? மன உறுதியை வளர்த்துக்கொண்டால் முதலில் அது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. மோட்சத்துக்குப் போவது பற்றி அப்புறம் யோசிக்கலாம்1" என்றார் தாத்தா.

குறள் 24:
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

பொருள்:
மன உறுதி என்னும் அங்குசம் நம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அவை தவறான வழியில் போகாமல் காக்கிறது. இந்த மன உறுதிதான் மோட்சம் அடைவதற்கு நாம் போட வேண்டிய விதையாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


25. இந்திரனே சாட்சி!

"நான் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து நன்றாக உழைத்து வியாபாரத்தை அதிகரித்திருக்கிறேன். ஆனால் இது என் மானேஜருக்குப் பொறுக்கவில்லை."

"என்ன செய்கிறார்?"

"முதலில் நான் கொண்டு வந்த சில ஆர்டர்களில் குற்றம் கண்டு பிடித்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். வேறு சில ஆர்டர்களுக்கு ஒழுங்காக சப்ளை செய்யாமல் ஆர்டர் கொடுத்தவர்களிடம் எனக்குக் கெட்ட பெயர் வரச் செய்தார். இப்போது மிகவும் கஷ்டமான ஒரு ஏரியாவுக்கு என்னை மாற்றி இருக்கிறார்."

"நீ முன்னேறி எங்கே அவர் இடத்துக்கு வந்து விடுவாயோ என்று பயம்!"

"அதற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்ன?"

"இது ஒன்றும் புதியதில்லை தம்பி. புராண காலத்திலே கூட இது நடந்திருக்கிறது."

"அப்படியா?"

"ஆமாம். விஸ்வாமித்திரர் தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகையை அனுப்பினான் என்று கதை கேட்டிருப்பாயே?"

"ஆமாம். அவளிடம் மயங்கி விஸ்வாமித்திரர் தன் தவத்தை விட்டு விட்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைதானே சகுந்தலை?"

"இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கிறாயே, இதற்கு பதில் சொல். விஸ்வாமித்திரர் தவத்தை இந்திரன் ஏன் கலைக்க வேண்டும்?"

"தெரியவில்லையே!"

"ஒருவர் புலன்களை அடக்கித் தவம் செய்தால் அவர் ஆற்றலில் தேவர்களுக்கு இணையாகி விடுவார். அப்படிப்பட்டவர்களால் தன் இந்திர பதவிக்கே ஆபத்து வந்து விடுமோ என்று பயந்துதான் இந்திரன் தவம் செய்தவர்களுக்கு இடையூறு செய்கிறான். விஸ்வாமித்திரர் மட்டும் இல்லாமல் வேறு சிலரின் தவத்தைக் கலைக்கவும் முயற்சி செய்திருக்கிறான் இந்திரன். உன் மானேஜர் செய்வதும் இப்படித்தான்."

"புலன்களை அடக்கித் தவம் செய்வது இத்தனை வலிமை வாய்ந்த செயலா? வியப்பாக இருக்கிறது!"

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.

பொருள்:
ஐம்புலன்களை அடக்கிக் கட்டுப்பாட்டோடு வாழ்பவர்களின் ஆற்றல் எத்தகையது என்பதற்கு இந்திரனே போதுமான சாட்சியாக விளங்குகிறான். (பலரின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த இடையூறுகளே ஐம்புலன்களை அடக்கிச் செய்யப்படும் தவத்தின் வலிமையை எடுத்துக்காட்டப் போதுமானவை.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


26. அவள் ஒரு சரித்திரம்!

கிருஷ்ணமூர்த்தி தன் இள வயதில் இறந்து போன போது அவன் மனைவி அலமேல் மங்காவுக்கு அவன் விட்டுச் சென்ற சொத்துக்கள் மூன்று வயதில் ஒரு பையனும், ஒரு வயதில் ஒரு பெண்ணும்தான்.

"என்ன செய்யப் போகிறாய்" என்றான் அவள் அண்ணன் கார்த்திகேயன். "பேசாமல் என் வீட்டுக்கு வந்து விடு. உன் குழந்தைகளை நான் படிக்க வைக்கிறேன்" என்றான். அவன் மனைவி உமா மௌனமாக இருந்தாள்.

"அது சரியாக வராது. நான் ஏதாவது வேலைக்குப் போகிறேன்" என்றாள் மங்கா.

"உனக்கு என்ன வேலை கிடைக்கும்?" என்று ஆரம்பித்த கார்த்திகேயன் மனைவியின் முறைப்பைக் கவனித்து விட்டு, சரி, "வேலை கிடைக்கும் வரை என் வீட்டில் இருந்து கொள். உன்னால் எப்படி வாடகை கொடுக்க முடியும்?" என்றான்.

"அவர் ஆஃபிஸிலிருந்து ஏதாவது பணம் வருமா?" என்றாள் உமா.

"அவர் வேலைக்குப் போய் சில வருஷங்கள்தானே ஆகின்றன? அதனால் ஒன்றும் வர வாய்ப்பு இல்லை" என்ற மங்கா "பரவாயில்லை அண்ணா. நான் என் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன். எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று பார்" என்றாள்.

துக்கம் கேட்க வந்த வீட்டுக்காரரிடம், "சார்! உங்களிடம் ஆறு மாதம் அட்வான்ஸ் இருக்கிறது. எனக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறேன். இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பதானால் மூன்று மாத வாடகையை அப்புறம் கொடுத்து விடுகிறேன்" என்றாள்.

வீட்டுக்காரர் கொஞ்சம் தயங்கி விட்டு "சரி" என்று சொல்லி விட்டுப் போனார்.

அடுத்த இரண்டு நாட்களில் கார்த்திகேயன் இரண்டு மூன்று முறை வந்தான். அவனுக்குத் தெரிந்த இடங்களில் சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஆள் தேவைப் படுவதாகச் சொன்னான். "அப்புறம் சொல்கிறேன் அண்ணா" என்று அவனை அனுப்பி விட்டாள் மங்கா.

இரண்டு நாள் கழித்து அவள் கணவன் வேலை செய்த அலுவலகத்துக்குப் போனாள். "சார், எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்க முடியுமா?" என்றாள்.

"என்ன படித்திருக்கிறீர்கள்?" என்றார் மானேஜர்.

"நான் அதிகம்  படிக்கவில்லை சார். என் வீட்டில் பத்தாவதோடு என் படிப்பை நிறுத்தி விட்டார்கள். ஆனால் எந்த வேலையானாலும் சீக்கிரம் கற்றுக்கொண்டு செய்து விடுவேன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்களேன்' என்றாள்.

"உங்களுக்கு ஏற்ற வேலை இங்கே இல்லையே! அத்துடன் நாங்கள் யாரையும் வேலைக்கு எடுப்பதானால் பம்பாயில் இருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும்"

"சார், நான் பம்பாய்க்குப் போய் உங்கள் தலைமை அலுவலகத்தில் கேட்டுப் பார்க்கட்டுமா?" என்றாள்.

மானேஜர் சற்று வியப்புடன் அவளைப் பார்த்தார். "சரி. நாளைக்கு எங்கள் ஜெனரல் மானேஜர் வருகிறார். நாளைக்கு வாருங்கள். அவரிடம் பேசிப் பார்க்கிறேன்."

அடுத்த நாள் ஜி.எம் (ஜெனரல் மானேஜர்) முன்பு கொண்டு நிறுத்தப்பட்டவள், தான் படிப்பில் சூட்டிகையாக இருந்ததையும், தனக்கு எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதையும், தன் விடா முயற்சியையும், கடின உழைப்பையும் பற்றிப் பத்து நிமிடங்கள் பேசினாள். 

அவளைத் தடுத்து நிறுத்த முயன்ற பிராஞ்ச் மானேஜரை சைகையால் அடக்கி விட்டு அவள் பேசிய தமிழில் ஒரு வார்த்தை கூடப் புரியாத ஜி.எம் பொறுமையாக அவள் பேச்சைக் கேட்டார்.

பிராஞ்ச் மானேஜரிடம், "ஒன்று கவனித்தீர்களா? இந்தப் பெண்மணி தன்னிடம் இரக்கம் காட்டச் சொல்லிக் கேட்கவில்லை. தன் குடும்பக் கஷ்டங்களைச் சொல்லிக் கெஞ்சவில்லை" என்றார் ஜி.எம்.

"இந்தப் பெண்மணி தமிழில் பேசியது உங்களுக்கு எப்படிப் புரிந்தது?" என்றார் பிராஞ்ச் மானேஜர்.

"அவர்கள் பேசிய தொனியிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் பெண்மணியிடம் அசாத்தியமான தன்னம்பிக்கையும் உந்துதலும் இருக்கின்றன. இவர் நமக்குப் பயனுள்ளவராக இருப்பார் என்று நினைக்கிறேன். இவருக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமா என்று பாருங்கள்."

மானேஜர் கொஞ்சம் யோசித்து விட்டு, "வரும் கடிதங்களைப் பிரித்துத் தனித் தனி டிபார்ட்மென்ட்டுகளுக்கு அனுப்புவது, டெஸ்பாட்ச் போன்ற வேலைகளை டைப்பிஸ்ட்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இங்கே டைப்பிஸ்டுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் தன்னால் முடியவில்லை என்று அந்தப் பெண் புலம்பிக் கொண்டிருக்கிறாள். அத்துடன் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டதால் இரண்டு மூன்று மாதங்களில் வேலையை விட்டுப் போய் விடுவாள். வரும் கடிதங்களைப் பிரித்து டிபார்ட்மென்ட்களுக்கு அனுப்புவது மற்றும் டெஸ்பாட்ச் வேலையை இவர்களுக்குக் கொடுக்கலாம். எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்றார் மானேஜர்.

"குட் ஐடியா" என்ற ஜி. எம். மங்காவைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு 'யு ஆர் அப்பாயின்ட்டட்" என்றார்.

"தாங்க் யூ சார்" என்றாள் மங்கா முதன்முதலாக ஆங்கிலத்தில்.

செய்யும் வேலையில் ஈடுபாடு, விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், கடின உழைப்பு ஆகிய குணங்களால் மங்கா விரைவிலேயே தனது வேலையைத் திறமையாகச் செய்யத் தொடங்கி விட்டாள். 

கடிதங்கள் பிரிவில் இருந்ததால் அலுவலகத்துக்கு வரும் கடிதங்கள், அலுவலகத்திலிருந்து செல்லும் கடிதங்கள் ஆகியவற்றைப்  படித்து அந்த அலுவலகத்தில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை விரைவில் புரிந்து கொண்டாள்.

டைப்பிஸ்ட் பெண் வேலையை விடும் மனநிலையில் இருந்ததாலும் பெரும்பாலும் வேலை இல்லாமல் சும்மா இருந்ததாலும் அவள் உதவியுடன் தட்டச்சு இயந்திரத்தில் ஓரிரு விரல்களைப் பயன்படுத்தி ஓரளவு டைப் அடிக்கவும் பழகிக் கொண்டாள் மங்கா. 

டைப்பிஸ்ட் பெண் வேலையை விட்டு விலகிய சமயத்தில் அவள் வேலையையும் தானே செய்வதாக மங்கா கூறியதை மானேஜர் ஏற்றுக்கொண்டார்.

ஒரு முறை தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம் பற்றிய சர்ச்சை வந்தது. அந்தக் கடிதம் வரவேயில்லை என்று ஒரு ஊழியர் சாதித்தார். மங்கா தன் நினைவிலிருந்து அந்தக் கடிதத்தில் இருந்த விஷயத்தைச் சொன்னதுடன், தனது ரிஜிஸ்தரில் அந்தக் கடிதம் வந்திருப்பதைப் பதிவு செய்ததையும் தேடிக் கண்டு பிடித்துக் காட்டினாள். பிறகு அந்தக் கடிதம் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம்  அந்த அலுவலகத்தில் ஒரு திறமையான ஊழியர் விழித்துக் கொண்டு செயல்படுவதை அனைவருக்கும் உணர்த்தி மங்காவின் மீது தனி மதிப்பு ஏற்பட வைத்தது.

ங்காவின் பையனைப் பள்ளியில் சேர்க்கும் சமயம் வந்தது. மங்கா நகரின் மிகச் சிறந்த, ஆனால் நன்கொடை வாங்காத பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் பட்டதாரிப் பெற்றோர்களின் பிள்ளைகளைத்தான் அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

விண்ணப்பம் போட்டு விட்டு ஒரு சில நாட்களில் மங்கா பள்ளி முதல்வரைச் சந்திக்க நேரில் சென்றாள். முதலில் முதல்வர் யாரையும் பார்க்க மாட்டார் என்று சொல்லி விட்டார்கள். 

மங்கா முதல்வர் அறைக்கு வெளியே பல மணி நேரம் நின்று கொண்டிருந்தாள். இரண்டு மூன்று முறை வெளியே வந்தபோது அவளை கவனித்த முதல்வர் அவளை உள்ளே அழைத்தார்.

"மேடம்! உங்கள் பள்ளியின் அணுகுமுறை எனக்குப் புரிகிறது. நான் அதிகம் படிக்காதவள்தான், ஆனால் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று என் கணவர் வேலை செய்த அலுவலகத்தில் கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களில் வேலையைக் கற்றுக் கொண்டு ஒரு பட்டதாரி செய்யும் வேலைகளைச் செய்கிறேன்.

"அதுபோல் நீங்களும் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என் பையன் சிறப்பாகப் படிக்க என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன். என் பையனுக்கு வீட்டில் படிப்பு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு எனக்குக் கல்வி அறிவு இல்லைதான். அதை நீங்கள் எதிர் பார்க்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவன் எப்படிப் படிக்கிறான் என்று கூர்ந்து கவனித்து அவனை ஊக்குவித்து வழிநடத்த என்னால் முடியும்" என்றாள்.

முதல்வர் யோசித்தார்.

"உங்கள் பள்ளியில் என் பையனைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த ஏரியாவிலேயே வீடு பார்த்திருக்கிறேன். அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி" என்றாள் மங்கா.

"அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள்" என்றார் முதல்வர்.

அலுவலகத்துக்குப் போனதும் அனுமதி கேட்டதை விட அதிகமான நேரம் தாமதமாகி விட்டதற்காக விளக்கம் சொல்வதற்காக மானேஜரின் அறைக்குப் போனாள் மங்கா.

அவள் "சாரி சார்" என்று ஆரம்பித்ததுமே அவளைக் கை அமர்த்தி விட்டு, "கங்கிராசுலேஷன்ஸ் மிஸஸ் மங்கா. உங்கள் பையனுக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடைத்து விட்டதாமே!" என்றார்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"பிரின்ஸிபால் ஃபோன் செய்தார்."

"எதற்கு? இதைச் சொல்வதற்காகவா?" என்றாள் மங்கா நம்ப முடியாமல்.

"அதற்காக இல்லை. உங்கள் சம்பளத்திலிருந்து உங்களால் ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியுமா என்று தெரிந்து கொள்ளத்தான்!"

"ஐயையோ!"

"பதறாதீர்கள். நான் சொன்னேன் 'மேடம், உங்கள் பள்ளிக் கட்டணம் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. திருமதி மங்காவின் சம்பளம் எவ்வளவு என்றும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். நீங்கள் அவர் பையனுக்கு உங்கள் பள்ளியில் இடம் கொடுத்து விட்டால், அவர் எப்படியும் ஃபீஸ் கட்டி விடுவார்' என்று. முதல்வர் சிரித்து விட்டு ஃபோனை வைத்து விட்டார்."

"ரொம்ப நன்றி சார்" என்றாள் மங்கா கண்ணில் நீர் தளும்ப.

"ஆமாம். அந்தப் பள்ளியில் கட்டணம் ரொம்ப அதிகமாயிற்றே? எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?"

"அதுதான் சார் எனக்கும் புரியவில்லை. நீங்கள் பள்ளி முதல்வரிடம் சொன்னது போல்  எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்ற அசட்டு தைரியத்தில்தான் இருக்கிறேன்."

"எல்.கே.ஜி,  யூ.கே.ஜி வரை சமாளித்து விடுங்கள். அப்புறம் நான் ஒரு யோசனை சொல்கிறேன்."

ரண்டு வருடம் கழித்து மங்கா மானேஜரிடம் கேட்டாள். "சார். என் பையன் இப்போது முதல் வகுப்புக்குப் போகிறான். எல்.கே.ஜி, யூ.கே.ஜி.யை எப்படியோ சமாளித்து விட்டேன். இந்த வருடத்திலிருந்து கட்டணம் அதிகமாக இருக்கும். என் பெண்ணை வேறு எல்.கே.ஜியில் சேர்க்க வேண்டும். அதே ஸ்கூலில் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார்கள். நீங்கள் ஏதோ யோசனை சொல்வதாகச் சொன்னீர்களே!"

"இரண்டு வருடத்தில் நீங்கள் கம்பெனியில் வேகமாக முன்னேறி என்னை எல்லாம் ஓவர்டேக் பண்ணி ஜி.எம். ஆகி விடுவீர்கள் என்று நினைத்து அப்படிச் சொன்னேன். ஆனால் நீங்கள் ஒரு ப்ரமோஷன்தானே வாங்கி இருக்கிறீர்கள்?" என்றார் மானேஜர் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

மங்காவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. "சார்" என்றாள் தழுதழுத்த குரலில்.

"அப்செட் ஆகி விடாதீர்கள். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருஷத்தில் ப்ரமோஷன் வாங்கியதே இந்தக் கம்பெனி வரலாற்றில் நீங்கள் ஒருவர்தான்."

"உங்கள் ஊக்குவிப்பும் ஆதரவும்தான் சார் காரணம்."

"இல்லை மங்கா. உங்கள் ஊக்கமும் அசுர உழைப்பும்தான் காரணம். சரி.  உங்கள் மகன் விஷயத்துக்கு வருவோம். சில பிரைவேட் டிரஸ்ட்கள் இருக்கின்றன. அவை சத்தம் போடாமல் பலருக்குக் கல்வி உதவி அளித்து வருகின்றன. ஒரு டிரஸ்ட்டின் விலாசம் தருகிறேன். அங்கே போய்ப் பாருங்கள். இந்த டிரஸ்டைப்பற்றி என் நண்பன் ஒருவன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆனால் இதை நான் சொன்னதாக அவர்களிடம் சொல்லக்கூடாது. சொன்னால் என் நண்பனுக்கு தர்ம சங்கடம் ஆகி விடும்" என்றார் மானேஜர்.

"நிச்சயம் சொல்ல மாட்டேன் சார்" என்று அவரிடம் விலாசம் வாங்கிக் கொண்டு அந்த டிரஸ்டுக்குப் போனாள்.

நிர்வாகியைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி, "இந்த டிரஸ்ட் பற்றி யார் உங்களுக்குச் சொன்னார்கள்?"

"எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார் சார்."

"நாங்கள் பெரும்பாலும் எங்களுக்குத் தெரிந்த குடும்பங்களுக்குத்தான் உதவி செய்து வருகிறோம். உங்களுக்கு எங்களைப் பற்றி யார் சொன்னது என்று சொன்னால்தான் உங்களுக்கு உதவ முடியுமா என்று பார்க்க முடியும்" என்றார்.

"மன்னிக்க வேண்டும் சார். உங்கள் டிரஸ்ட் பற்றி என்னிடம் சொன்னவர் அவர் சொன்னதாகச் சொல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பெயரை என்னால் சொல்ல முடியாது."

"அப்படியானால் உங்களுக்கு என்னால் உதவ முடியாது."

"நன்றி சார். தொந்தரவு கொடுத்ததற்கு மன்னியுங்கள்" என்று எழுந்தாள் மங்கா.

அறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் வெளியேறும் தருவாயில் நிர்வாகி அவளை அழைத்தார். "உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். உங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்" என்றார்.

மங்கா தன் வேலை, குடும்பம் ஆகியவற்றைப் பற்றிச் சொன்னதும், "சரி. உங்கள் பையனுக்கு நாங்கள் ஸ்காலர்ஷிப் தருகிறோம். ஸ்கூல் ஃபீஸ், புத்தகச் செலவு என்று எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்கூலுக்கே நேரே பணத்தைச் செலுத்தி விடுவோம். ஆனால் ஒரு நிபந்தனை. உங்கள் பையன் ஒவ்வொரு வருடமும் எழுபத்தைந்து சதவீதத்துக்கு மேல்  மதிப்பெண்கள் பெற வேண்டும்"

"நல்லது சார். இந்த நிபந்தனை என் பையனுக்கு நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்கு ஒரு மோடிவேஷனாக இருக்கும்." 

"பொதுவாக யாரும் இந்த நிபந்தனையைக் கேட்டால், 'ஏதாவது ஒரு வருடம் எழுபத்தைந்து சதவீதம் பெறாவிட்டால் ஸ்காலர்ஷிப் நின்று போய் விடுமே' என்று கவலைப் படுவார்கள். ஆனால் நீங்கள் இதை பாஸிடிவாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்... ஆமாம்,. உங்கள் பெண்ணையும் ஸ்கூலில் சேர்க்கப் போகிறீர்களே, அவளுக்கும் ஸ்காலர்ஷிப் தேவைப்படும் இல்லையா?"

"ஆமாம் சார். ஆனால் அவளுக்கும் எப்படி உங்களிடமே கேட்க முடியும்?"

"கரெக்ட்தான். நாங்கள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் ஸ்காலர்ஷிப் கொடுப்போம். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்குத் தெரிந்த இன்னொரு டிரஸ்ட்டில் உங்கள் பெண்ணுக்காக சிபார்சு செய்கிறேன்."

"சார். நீங்கள் வயதில் பெரியவர். உங்கள் காலில் விழுந்தால் தவறில்லை" என்று தன் காலில் விழப் போன மங்காவைத் தடுத்தார் நிர்வாகி.

ல வருடங்கள் ஓடி விட்டன. மங்காவின் பையனும் பெண்ணும் படிப்பிலும், மங்கா தன் அலுவலகத்திலும் பல படிகள் முன்னேறிச் சென்று விட்டனர். மங்கா ஒரு மூத்த அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்து விட்டாள். அவளை வேலையில் அமர்த்திய பிராஞ்ச் மானேஜர் இப்போது தலைமை அலுவலகத்தில் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் என்ற மிக உயர்ந்த பதவிக்குப் போய் விட்டார்.

மங்காவின் பையன் கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டுக்கு வந்து அவனுக்கு காம்பஸ் தேர்வில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. மங்காவின் பெண் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ழக்கமாக முதல் ஆளாக அலுவலகத்துக்கு வந்து விடும் மங்கா அன்று அலுவலகத்துக்கு வரவில்லை. பிராஞ்ச் மானேஜர் உதவி பிராஞ்ச் மானேஜரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"ஒரு அதிர்ச்சியான செய்தி. மங்கா மாரடைப்பால் இறந்து விட்டாராம். இப்போதுதான் எனக்கு ஃபோன் வந்தது" என்றார்.

"என்னால் நம்ப முடியவில்லையே சார்! ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்த ஒரு இயந்திரம் திடீரென்று நின்று விட்டது போல் இருக்கிறது."

"இதை நான் உடனே ஈ.டிக்குத் தெரிவிக்க வேண்டும். மங்கா வேலையில் சேர்ந்தபோது இங்கே பிராஞ்ச் மானேஜராக இருந்தவர் அவர்தான்" என்று சொல்லித் தொலைபேசியில் ஈ.டியுடன் பேசினார்.

அவர் பேசி முடித்ததும், "ஈ.டி. என்ன சொன்னார்?" என்று கேட்டார் உதவி மானேஜர்.

"ஒரு நிமிஷம் அவருக்குப் பேச்சே வரவில்லை. 'எ ரிமார்க்கபிள் உமன்' என்றார். அதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை அவருக்கு."

இருக்கையிலிருந்து எழ முயன்ற உதவி மானேஜரை, "ஒரு நிமிஷம்" என்று சொல்லி நிறுத்திய மானேஜர், "மங்கா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நாளை நம் கம்பெனியின் எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று ஈ.டி. அறிவித்திருக்கிறார். சர்க்குலர் அனுப்பி விடுங்கள்" என்றார்.

"ஆச்சரியமாக இருக்கிறது சார். இது போல் வேறு எந்த ஊழியர் விஷயத்திலும் நடந்ததில்லையே" என்றார் உதவி மானேஜர்.

"உண்மைதான். மங்கா  சரித்திரம் படைத்திருக்கிறார். அவரே ஒரு சரித்திரம்தான்" என்றார் பிராஞ்ச் மானேஜர்.

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பொருள்:
மற்றவர்களால் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவர்களைப் பெரியோர் என்று கருத வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியோர்களாகத்தான் கருதப்படுவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


27. சாப்பாட்டு ராமன்!

""ஐயையோ! இந்த சாப்பாட்டு ராமன் இங்கே எப்படி வந்தான்?" என்று பதைபதைத்தார் சமையல்காரர் ராஜகோபால்.

"வாங்க மூர்த்தி. நான் இப்பதான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன். நீங்களும் என்னோட சாப்பிடலாமே!" என்றார் நீலகண்டன்.

"இல்லை இல்லை நான் இவ்வளவு சீக்கிரம் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட  மாட்டேன். நீங்க சாப்பிடுங்க. நீங்க சாப்பிடும்போதே உங்ககிட்ட கொஞ்சம் பேசிட்டுக் கிளம்பிடறேன்" என்றார் மூர்த்தி.

"அப்ப காப்பி மட்டுமாவது சாப்பிடுங்க" என்றார் நீலகண்டன்.

"நிச்சயம். உங்க வீட்டு சமையல்காரர் ராஜகோபாலோட கைமணம் காப்பியில கூட ஜொலிக்குமே!" என்றார் மூர்த்தி.

"என்ன இன்று இவர் நம்மைப் புகழ்ந்து பேசுகிறார்?" என்று வியந்த ராஜகோபால் எச்சரிக்கையுடன் காப்பி கலந்து எடுத்து வந்தார்.

"உங்களுக்கு இவரைத் தெரியுமா?" என்றார் நீலகண்டன் வியப்புடன்.

"ஒரு கல்யாணத்தில பாத்திருக்கார். அப்பவே என் சமையலைப் பாராட்டி இருக்கார் சார்!" என்றார் ராஜகோபால் முந்திக்கொண்டு.

காப்பியை அருந்துவதற்கு முன்பே, "என்ன ராஜகோபால், பாலைக் கொஞ்சம் அதிகமாகக் காய்ச்சி விட்டீர்கள் போலிருக்கே! காப்பி வாசனையிலேயே தெரிகிறதே!" என்றார் மூர்த்தி.

"எனக்குத் தெரியலியே!" என்றார் நீலகண்டன்.

"அதுதானே பார்த்தேன். குற்றம் சொல்லாமல் இருக்க முடியாதே இவரால்!" என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டார் ராஜகோபால்.

காப்பியை ஒரு வாய் உறிஞ்சிய மூர்த்தி, "ஆகா காப்பியின் மணம் அருமை. ஆமாம். எப்பவும் உங்க வீட்டிலே ஏஆர் காப்பிதானே வாங்குவீர்கள். இப்ப எம்கே பொடிக்கு மாறிட்டீங்க போலிருக்கே!" என்றார்.

"என்ன மூர்த்தி இது? காப்பியைக் குடிச்சுப் பாத்துட்டு என்ன பிராண்ட் என்றெல்லாம் சொல்றீங்களே!" என்றார் நீலகண்டன் வியப்புடன்.

'என்ன பிராண்ட் என்று மட்டுமா சொல்லுவார்? எந்தத் தோட்டத்தில விளைந்த காப்பின்னு கூடச் சொல்லுவார். மூக்குக்கும் நாக்குக்கும் அப்படி ஒரு சக்தி. நான் அனுபவிச்சிருக்கேனே!' என்று நினைத்துக்கொண்டார் ராஜகோபால்.

ரண்டு மாதங்கள் முன்பு ராஜகோபால் ஒரு கல்யாணத்தில் சமையல் பொறுப்பை ஏற்றிருந்தார். பந்தியில் சாப்பிட்டு விட்டு, சமையற்கட்டுக்கு வந்த மூர்த்தி ராஜகோபாலிடம் வந்து, "நீங்கள்தான் சமையலா? சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. ஆனா ரெண்டு மூணு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டீர்கள்" என்றார்.

"எதில்?" என்றார் ராஜகோபல்.

"தேங்காய்த் துவையல் அரைத்திருக்கிறீர்கள். ஆனால் அழுகல் தேங்காயைப் பயன்படுத்திருக்கிறீர்கள்."

"முப்பது தேங்காய் போட்டு அரைத்திருக்கிறேன். அதில் ஒரு தேங்காய்தான் அழுகல்."

"ஒரு பால் குடத்தில் ஒரு துளி விஷம் கலந்தால் போதாதா? ...அப்புறம் மோர்க் குழம்பில் மஞ்சள் பொடி அதிகம் போட்டு விட்டீர்கள். அதனால் குழம்பில் ஒரு கசப்பு வந்து விட்டது."

"எல்லோரும் மோர்க் குழம்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்."

"சொல்லி விட்டு, வாயில் தங்கி இருக்கும் இந்தக் கசப்பு எங்கிருந்து வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்திப்பார்கள்!... அப்புறம் பாயசத்தில் போட்ட முந்திரிப் பருப்பு பழைய சரக்காக இருக்கும் போலிருக்கிறது. ஒரு மாதிரி பாச்சை உருண்டை வாசனை வருகிறது."

"வேறு ஏதாவது உண்டா?"

"மற்றதெல்லாம் சின்ன விஷயங்கள். அதானால் அவற்றைச் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு சமையல் நன்றாக வருகிறது. இது போன்ற குறைகள் வராமல் பார்த்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். வரட்டுமா? ...அப்புறம் ரசத்தில் கருவேப்பிலையைப் போட்டுக் கொதிக்க விட்டிருக்கிறீர்கள். கொதி வந்ததும் கருவேப்பிலையைப் போட்டு ரசத்தை இறக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் கருவேப்பிலையின் கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக ரசத்தில் இறங்கும். கடைசிப் பந்தியில் சாப்பிடுபவர்கள் பாவம் ரசத்துக்குப் பதிலாக கஷாயத்தைத்தான் குடிக்க வேண்டி இருக்கும்!"

புயல் போல் வந்து திடீர் மழை போல் பெய்து விட்டு மின்னல் போல் மறைந்து விட்டார்.

'ன்று மறுபடியும் நாம் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடத்தில் வந்து... நல்ல வேளை காப்பியை மட்டும் குடித்தார். இல்லாவிட்டால் இட்லி வேகவில்லை, தோசை கருகி விட்டது, பொங்கலில் உப்பு அதிகம் என்று ஏதாவது சொல்லி விட்டுப் போயிருப்பார்.'

"ஒரு நிமிடம் இருங்கள். கை கழுவி விட்டு வருகிறேன்" என்று நீலகண்டன் எழுந்து வெளியே போனார்.

"நான் நீங்கள் செய்த டிஃபன் அயிட்டங்களைச் சாப்பிடவில்லையே என்று வருத்தப் படாதீர்கள். 'நான் இன்னும் கொஞ்ச நேரம் கழித்துத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவேன்' என்று நீலகண்டனிடம் ஒரு சால்ஜாப்புக்காகத்தான் சொன்னேன். இது நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் நேரம்தான்.

"உங்கள் சமையலில் எண்ணெய், காரம், நெய் எல்லாமே தூக்கலாக இருக்கும். அதனால்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டேன். நான் பதமான உணவை அளவோடு சாப்பிடும் பழக்கம் உள்ளவன். என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. ஒன்றும் வரக் கூடாது என்றுதான் கட்டுப்பாடாக இருக்கிறேன்.

"என் நாக்கு நீளம்தான். அது ருசி பார்ப்பதில் மட்டும்தான். வயிற்றுக்குள் உணவு வகைகளை அனுப்புவதில் இல்லை. அடுத்த தடவை இங்கே வரும்போது கண்டிப்பாக உங்கள் சமையலைச்  சாப்பிடுகிறேன் அதாவது ருசி பார்க்கிறேன்" என்று எழுந்த மூர்த்தி, மேஜையின் மீதிருந்த சாம்பாரைப் பார்த்து விட்டு, "அவசரத்தில் சாம்பாரைச் சரியாகக் கொதிக்க வைக்கவில்லை போல் இருக்கிறது. பொடி வாசனை அடிக்கிறது. நீலகண்டன் பாவம் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

குறள் 27:
சுவை ஒளி  ஊறு ஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

பொருள்:
சுவை, காட்சி, தொடு உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்து உணர்வுகளை நுகரும் ஐம்புலன்களின் பலனை உணர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவனை உலகம் போற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


28. நூலகத்தில் ஒரு பரீட்சை!

குணசீலன் ஒரு பதிப்பாளர் அதாவது நூல்களை அச்சிட்டு வெளியிடுபவர். ஒரு நண்பர் மூலம் அவர் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.

ஒருநாள் அவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அவர் தன்னுடைய நூலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அவருடைய நூலகத்தில் அவர் வெளியிட்ட எல்லா நூல்களின் பிரதிகளையும் வரிசையாக வைத்திருந்தார். மொத்தம் 247 நூல்களை வெளியிட்டிருப்பதாகச் சொன்னார்.

"தமிழில் இருக்கும் 247 எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நூல் என்று கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே!" என்றேன் சிரித்துக்கொண்டே.

"நான் இன்னும் நூல் வெளியிடுவதை நிறுத்தவில்லையே! அதனால் என் நூல்களின் எண்ணிக்கை 247ஐத் தாண்டி விடும்!" என்றார் குணசீலன். தொடர்ந்து, "நூல்களின் பெயர்களையும், அவற்றை எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது" என்றார்.

"பரீட்சை வைப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் இந்த விளையாட்டுக்கே வந்திருக்க மாட்டேனே!" என்றேன் நான் விளையாட்டாக.

அவர் அறைக்கு வந்து அமர்ந்ததும் என்னிடம் கேட்டார் "இத்தனை நூல்களைப் பார்த்தீர்களே, அவற்றில்  உங்களுக்கு நினைவிருக்கும் நூல்களின் பெயர்களையும், நூலாசிரியர்களின் பெயர்களையும் சொல்லுங்கள்" என்றார்.

வகையாக மாட்டிக்கொண்டோமே என்று நினைத்து, யோசித்து யோசித்து, பத்து  நூல்களின் பெயர்களையும், முன்று நூலாசிரியர்களின் பெயர்களையும் சொன்னேன்.

"ஒரு ஆச்சரியமான விஷயம். இந்தக் கேள்வியை நான் இங்கே வந்த பலரிடமும் கேட்டிருக்கிறேன். எல்லோருமே ஏறக்குறைய நீங்கள் சொன்ன பெயர்களைத்தான் சொன்னார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது?"

'இங்கே வந்த எல்லோருமே என்போல் அறிவில் குறைந்தவர்கள்தான் போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் சொல்லவில்லை. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறியக் காத்திருந்தேன்.

"இன்னோர் ஆச்சரியத்தையும் சொல்லி விடுகிறேன். நீங்கள் பத்து நூல்களின் பெயர்களைச் சொன்னீர்கள். மூன்று நூலாசிரியர்களின் பெயர்களையும் சொன்னீர்கள். இந்தப் பத்து நூல்களை எழுதியவர்கள் இந்த மூன்று பேர்தான்!" என்றார் அவர்.

"ஆச்சரியமாக இருக்கிறதே!"

"உண்மையில் இது ஆச்சரியமான விஷயமே இல்லை. எத்தனையோ பேர் எத்தனயோ நூல்களை எழுதுகிறார்கள். அவை நன்றாக விற்பனை ஆகலாம். அவை வெளியிடப்பட்ட காலத்தில் பாராட்டுகள் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால் காலத்தால் அழியாத நூல்கள் சிலதான். இந்த நூல்கள், இவற்றை எழுதியவர்களின் மேன்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்."

அவர் சொன்ன கருத்து எனக்குப் புரிந்தது. ஆனால் நல்ல வேளையாக அவர் 'இதிலிருந்து என்ன தெரிகிறது?'  என்று கேட்கவில்லை! கேட்டிருந்தால், "என்னைப் போன்றவர்கள் நூல்கள் எழுதக் கூடாது என்று தெரிகிறது" என்று பதில் சொல்லி இருப்பேன்!

குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பொருள்:
உயர்ந்த கருத்துக்களைக் கூறிய  சான்றோர்களின் பெருமையை இவ்வுலகில் நிலைத்து நிற்கும் அவர்களது சொற்களே (விட்டுச் சென்ற நூல்கள்/கருத்துக்கள்/அறிவுரைகள்) எடுத்துக் காட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


29. சாது மிரண்டால்...   

குப்புசாமி வேலையிலிருந்து  ஓய்வு பெற்று விட்டார். அரசு அலுவலகத்தில் முப்பத்தைந்து வருடப் பணி. 

பொதுவாக வேலையிலிருந்து ஒய்வு பெறுபவர்களுக்குப் பெரிய அளவில் வழியனுப்பு விழா நடத்துவது அந்த அலுவலகத்தில் வழக்கம். ஒய்வு பெற்றுப் போகிறவருக்கு விலையுயர்ந்த பரிசும் வழங்கப்படும். 

குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அந்தத் தொகைக்கு ஈடாக என்ன பொருள் வேண்டும் என்று ஒய்வு பெறப் போகிறவரிடமே கேட்டு அதையே பரிசுப் பொருளாக வாங்கிக் கொடுப்பார்கள்.

குப்புசாமிக்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு ஏர் கண்டிஷனர், எல்.ஈ.டி. டிவி போன்ற பொருட்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டன. 

பெரிய அளவில் பணம் புழங்கும் அலுவலகம் என்பதாலும், பல ஊழியர்கள் பணி புரியும் அலுவலகம் என்பதாலும் பரிசுப் பொருள் வாங்கவும், பாராட்டு விழா நடத்தவும், ஊழியர்களிடம் பணம் வசூல் செய்வது ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.

ஆனால் குப்புசாமி விஷயம் வேறு. குப்புசாமிக்கு அவர் அலுவலகத்தில் சாது, சந்நியாசி, பிழைக்கத் தெரியாதவர், தானும் பிழைக்காமல் மற்றவர்களையும் பிழைக்க விடாமல் செய்பவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் உண்டு. 

பெருமளவு லஞ்சப் பணம் புழங்கும் அந்த அலுவலகத்தில் குப்புசாமி ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியது கிடையாது.

தன் வேலையை முறையாகச் செய்வது என்ற கொள்கையை வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் ஒய்வு பெறும் நாள் வரை தவறாமல் கடைப் பிடித்தவர் குப்புசாமி.

ஆயினும் அவர் யாரிடமும் சண்டை போட்டதில்லை. விதிகளுக்கு முரணாக எதையாவது செய்யம்படி அவர் மேலதிகாரிகளோ, மற்ற ஊழியர்களோ அழுத்தம் கொடுத்தால், 'முடியாது' என்று ஒரே வார்த்தையில் மறுத்து விடுவார்.

'நான் நேர்மையானவன். விதிகளுக்கு முரணாக எதுவும் செய்ய மாட்டேன்' என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளிக்க மாட்டார். 

விவாதத்தில் ஈடுபட்டால் ஒரு நிலையில் மற்றவர் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று  நினைத்தாரோ என்னவோ! இதனால் அவருக்குக் 'கல்லுளி மங்கன்' என்றும் ஒரு பெயர் உண்டு.

"மனிதன் வாயைத் திறந்து பேசினால் எதையாவது சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்து விடலாம். வாயையே திறக்காமல் சின்னக் குழந்தைகள் பிடிவாதமாகத் தலையை மட்டும் ஆட்டி 'முடியாது' என்று சொல்லுமே, அதுபோல் 'முடியாது' என்று ஒரே வார்த்தையில் பேச்சை முடித்து விடுகிறாரே, இவரிடம் எப்படிப் பேச முடியும்?" என்று அவரது மேலதிகாரி ஒருவர் ஒரு ஊழியரிடம் ஒரு முறை அலுத்துக் கொண்டார்.

குப்புசாமியின் வழியனுப்பு விழா எளிமையாக நடந்து முடிந்தது. அருகில் இருந்த டீக்கடையில் வாங்கிய எளிமையான சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டன.

சில மேலதிகாரிகள் உட்படப் பல ஊழியர்கள் 'வேறு வேலை' காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஒப்புக்கு ஓரிருவர் குப்புசாமியின் கடின உழைப்பைப் பற்றிப் பேசினர். ஒரு ஊழியர் 'குப்புசாமி மற்றவர்களுக்கு இன்னும் சிறிது ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் அவருக்கும், மற்றவர்களுக்கும் உதவியாக இருந்திருக்கும்' என்று குறிப்பிட்டார்.

ஒரு சுமாரான சுவர்க் கடிகாரம் 'நினைவுப் பரிசாக' வழங்கப்பட்டது. குப்புசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்துச் சுருக்கமாகத் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

பொதுவாக ஒய்வு பெற்ற ஊழியருக்கு ஒய்வு பெற்ற இரண்டு மாதங்களில் ஓய்வூதியம் சாங்ஷன் ஆகி விடும். ஆனால் குப்புசாமிக்கு ஆறு மாதங்கள் ஆகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. 

தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, அவர் வேலை பார்த்த அலுவலகத்திலிருந்து விவரங்கள் வரவில்லை என்று சொன்னார்கள். குப்புசாமி தான்  வேலை பார்த்த அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தார்.

"எப்போதோ அனுப்பி விட்டோமே" என்றார் இதற்குப் பொறுப்பான ஊழியர்.

"பொய் சொல்லாதீர்கள்" என்றார் குப்புசாமி. 

அவருடைய குரல் உயர்ந்திருந்ததை ஊழியர் கவனித்தார்.

"என்னிடம் கேட்காதீர்கள். ஆஃபீஸரிடம் போய்க் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் ஊழியர் அலட்சியமாக.

"எங்கே உங்கள் ஆஃபீஸர்? வெளியே வரச் சொல்லுங்கள் அவரை," 

குப்புசாமியின் குரல் ஓங்கி ஒலித்தது. அலுவலகம் முழுவதும் அவர் குரல் கேட்டது. பல ஊழியர்கள் ஆச்சரியத்துடன் அவர் பக்கம் திரும்பினர். பக்கத்து அறையிலிருந்த அதிகாரி வெளியே வந்தார்.

 "என்ன இங்கே சத்தம்?" என்றார் தோரணையாக.

"வாருங்கள் மிஸ்டர் தர்மலிங்கம். என் பென்ஷன் பேப்பர்களை அனுப்பி விட்டதாக உங்கள் ஊழியர் பொய் சொல்கிறார். கொஞ்சம் விசாரியுங்கள்." 

குப்புசாமியின் குரல் சற்றும் இறங்கவில்லை! குப்புசாமியால் இப்படிப் பேச முடியுமா என்று அவரது முன்னாள் சக ஊழியர்கள் நம்ப முடியாமல் பார்த்தனர்.

"இங்கே பாருய்யா! பொய்ன்னு எப்படிச் சொல்றே?" என்றார்  ஊழியர்  கோபத்துடன்.

"இங்கே பாருங்கள் மிஸ்டர் தர்மலிங்கம். உங்கள் ஊழியரைக் கொஞ்சம் மரியாதையாகப்  பேசச் சொல்லுங்கள்"  என்றார் குப்புசாமி. "அனுப்பி விட்டீர்கள் என்றால் என்றைக்கு அனுப்பினீர்கள், லெட்டர் நம்பர் என்ன என்ற விவரங்கள் வேண்டும் எனக்கு."

"நாளைக்கு வாருங்கள். பார்த்து வைக்கிறேன்" என்றார் அதிகாரி.

"நாளைக்கெல்லாம் வர முடியாது. ஒரு மாதத்தில் அனுப்ப வேண்டிய பேப்பரை ஆறு மாதம் ஆகியும் அனுப்பவில்லை. விவரம் தெரியாமல் நான் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மாட்டேன்"

"கொஞ்சம் பார்த்துச் சொல்லேன்யா!" என்றார் அதிகாரி ஊழியரிடம்.

"தேட வேண்டும் சார். இப்போது முடியாது" என்றார் ஊழியர் பிடிவாதமாக.

அதிகாரி குப்புசாமியையும் ஊழியரையும் மாற்றி மாற்றிப் பார்த்து விட்டு, ஊழியரிடம் குனிந்து, "அவர் ஃபைலைத் தேடி எடுங்கள். ஆபீசுக்கு வந்திருக்கிற பொது மக்கள் வேறு வேடிக்கை பார்க்கிறார்கள்" என்றார் தாழ்ந்த குரலில்.

ஊழியர் சற்று நேரம் தேடி விட்டு, "இங்கேதான் இருக்கிறது. நாளைக்கு அனுப்பி விடுகிறேன்" என்றார் அதிகாரியிடம் சுரம் இறங்கிய குரலில்.

"அப்படியானால் அனுப்பி விட்டேன் என்று நீங்கள் முதலில் சொன்னது பொய்தானே?" என்றார் குப்புசாமி குரலை உயர்த்தி. "ஏன்   இத்தனை நாட்களாக இதை ப்ராசஸ் பண்ணவில்லை? பொது மக்களிடம் லஞ்சம் வாங்குவது போல் என்னிடமும் ஏதாவது கறக்கலாம் என்று நினைத்தீர்களா?"

"நீங்கள் கிளம்புங்கள் சார்! நாளைக் காலையில் முதல் வேலையாக இதை அனுப்பி விடுகிறேன். இது என்னுடைய பொறுப்பு" என்றார் அதிகாரி கெஞ்சாக் குறையாக.

"ஏன் இன்றைக்கே அனுப்பலாமே!" என்று  ஆரம்பித்த குப்புசாமி, "சரி. நாளைக்கே அனுப்புங்கள். நாளை மறுநாள் இந்தப் பேப்பர் தலைமை அலுவலகத்துக்கு வராவிட்டால் உங்கள் மீது விஜிலன்ஸில் புகார் கொடுப்பேன்!" என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினார்.

அவர் சென்றதும் அதிகாரி ஊழியரிடம், "இதை இன்றைக்கே பிராசஸ் பண்ணி அனுப்புங்கள். நாளைக்குத் தள்ளிப் போட வேண்டாம்!" என்றார்.

குறள் 29:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

பொருள்:
தங்கள் நற்குணங்களால் உயர்ந்த நிலையில் இருக்கும் சான்றோர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபத்தின் கடுமையை மற்றவர்களால் ஒரு கணம் கூடத் தாங்க முடியாது. ('குணங்களால் உயர்ந்த சான்றோர்களுக்குக் கோபம் வந்தால் அந்தக் கோபம் அவர்களிடம் ஒரு கணம் கூட நிலைத்திருக்காது - அவர்கள் உடனே சாந்தம் அடைந்து விடுவார்கள்' என்று திரு மு.கருணாநிதி அவர்கள் இந்தக் குறளுக்குப் பொருள் கூறி இருக்கிறார். இதுவும் பொருத்தமான பொருளாகத்தான் தோன்றுகிறது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


10. உயிர்களிடத்து அன்பு வேண்டும்!

கணபதி சிறுவனாக இருந்தபோது அவன் பார்த்த சில சம்பவங்கள் அவனை மிகவும் பாதித்து விட்டன.  

அவன் ஊர் எல்லையில் இருக்கும் ஆற்றில் கோடையில் நீர் இருக்காது. அப்போது மாலை வேளையில் அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்று மணலில் விளையாடுவான். சில சமயம் மணலில் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பான்.

ஆற்றின் ஓரத்தில் ஒரு குட்டை போல் நீர் தேங்கி இருக்கும். அந்தத் தண்ணீரில் தண்ணீர்ப் பாம்புகள் இருக்கும். சில சிறுவர்கள் அந்தப் பாம்புகளைப் பிடித்து அவற்றின் கழுத்தில் அழுத்தமாகக் கையை வைத்து மூச்சுத் திணறச் செய்து பிறகு அவற்றைச் சுழற்றி தூரத்தில் எறிவார்கள்.

இன்னும் சிலர் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த ஆலமரத்தின் விழுதில் முடிச்சுப் போட்டு பாம்புகளின் கழுத்தை அந்த முடிச்சில் இறுக்கித் தூக்கில் போடுவார்கள். மற்ற சிறுவர்கள் இதைப் பார்த்துக் கைதட்டிச் சிரிப்பார்கள்.

கணபதியால் பாம்புகள் படும் அவஸ்தையைப் பொறுக்க முடியவில்லை. ஆற்றங்கரைக்குப் போவதை நிறுத்தி விட்டான். 

திடீரென்று ஒரு நாள் வீட்டில் செய்த அசைவ உணவை உண்ணவும் மறுத்து விட்டான். அவன் பெற்றோர் வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை. "ஏண்டா நீ என்ன ஐயர் வீட்டுப் பிள்ளையா?" என்று அவன் அம்மா கேட்டதற்கு "பிற உயிர்களைக் கொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது" என்றான்.

கணபதி வளர்ந்து பெரியவனாகி வேலையில் சேர்ந்ததும் வீட்டில் அவனுக்குப் பெண் பார்த்தார்கள். அவன் இயல்பை அறிந்து அசைவம் உண்ணாத குடும்பத்தில்தான் அவன் பெற்றோர் அவனுக்குப் பெண் பார்த்தார்கள். பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைப் பார்த்த பின் அவளிடம் தனியாகப் பேச விரும்பினான் கணபதி.

தனியாக இருந்த போது அவளிடம், "நம் வீட்டில், எலிப்பொறி, கொசு வத்தி, கரப்பான் கொல்லி போன்ற மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இதற்கு நீ சம்மதித்தால்தான் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியும்" என்றான்.

"கொசுக்கடியைத் தாங்கிக்கொண்டுதான் வாழ வேண்டுமா?" என்றாள் அந்தப் பெண்.

"வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் கொசுத்தொல்லை குறைவாகத்தான் இருக்கும். கொசு வலையில் தூங்கலாம். நம் உடலில் கொசுக்கடியைத் தடுக்கும் ஆயின்ட்மென்ட்டைத் தடவிக் கொள்ளலாம். அப்படியும் கொசு நம்மைக் கடித்தால் கையால் அதை அடித்துக் கொல்வதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் உயிரினங்களை வேட்டையாடும் செயல் வேண்டாமே!" என்றான்.

அந்தப் பெண் "ஐ ஆம் சாரி" என்று சொல்லி அவனை நிராகரித்தாள்.

வேறு பல பெண்களும் அவன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஒருமுறை அவன் இது பற்றி அந்தண குலத்தைச் சேர்ந்த அவன் நண்பனிடம் கூறியபோது, "என்னடா இப்படி இருக்கிறாய்? தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது" என்றான். (எந்த சாஸ்திரம் என்று கேட்டிருந்தால் அவனிடம் பதில் இருந்திருக்காது. அவனிடம் மட்டும் இல்லை, அவனுக்கு இதை உபதேசித்த பெரியவர்களிடமும்தான்!)

"நம்மைக் கொல்ல வந்த ஜீவனைத் தற்காப்புக்காகக்  கொல்வது வேறு. நாமே வலுவில் போய்ப் பிற உயிர்களைக் கொல்வது வேறு" என்றான் கணபதி.

"ஐ.நா.வில் சர்வதேசக் கொசு ஒழிப்புத் துறையில் ஒரு வேலை காலியாக இருக்கிறதாம். நீ அந்த வேலையில் சேர்ந்து ஐந்து வருடம் உலகெங்கும் சுற்றி உலகக் கொசுக்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைத்து விட்டு வா. வேலையில் சேர்ந்த பிறகு கடமைக்காகவாவது கொசு ஒழிப்பில் ஈடுபட்டுத்தானே ஆக வேண்டும்! அப்போதுதான் நீ திருந்துவாய்!" என்றான் அந்தண நண்பன்.

கணபதியின் பெற்றோர்கள் சலிப்படைந்து அவனுக்குப் பெண் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள். உங்களுக்குத் தெரிந்த, கணபதியின் நிபந்தனைகளுக்கு ஒத்து வரும் பெண் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்!

குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள்:
எல்லா உயிர்களிடமும் கருணையோடு இருக்கும் அறவோர்தான் அந்தணர் என்று கருதப்படுவர்

இந்தக் கதையின் காணொளி வடிவம்:



பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















No comments:

Post a Comment