About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 4 - அறன் வலியுறுத்தல்

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்

31. நேர்மைக்குக் கிடைத்த பரிசு! 

வேணுகோபால் தொழில்  தொடங்கியபோது  அவர் போட்ட மூலதனம் நூறு ரூபாய்தான். ஆனால் முப்பது வருடங்களில் அவர் தொழில் பெரிதாக வளர்ந்து வேணுகோபால் குழுமம் என்று அகில இந்தியப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

வேணுகோபாலிடம் ஒரு பலவீனம்(!) உண்டு. அவர் லஞ்சம் கொடுப்பதில்லை. வரி ஏய்ப்புச் செய்வதில்லை. பில் இல்லாமல் எந்தப் பொருளும் வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை.

இந்தக் கொள்கையினால் அவர் பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறார். ஆயினும் அதிக வாய்ப்புள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்து அந்தத் துறைகளில் முதலில் சிறிய அளவில் முதலீடு செய்து தாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தினாலும், சிறப்பான சேவையாலும் வேகமான வளர்ச்சியை எட்டுவது என்ற அவரது அணுகுமுறை அவருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தது. 

ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பின், லஞ்சம் கொடுக்காமலேயே தமக்கு வேண்டிய அரசு அங்கீகாரங்களை அவரால் உரிமையோடு கேட்டுப் பெற முடிந்தது.

தமது குழுமம் பெரிதும் வளர்ச்சி பெற்றபின் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப உதவியுடன் பெரிய அளவில் ஒரு ரசாயன உற்பத்தி நிறுவனத்தைத் துவங்க விரும்பினார் வேணுகோபால். அவருக்குத் தொழில்நுட்ப உதவி அளிக்க முன் வந்த வெளிநாட்டு நிறுவனம் உலக அளவில் புகழ் பெற்றது. 

இந்தத் தொழிலில் அவருடன் இணைந்து முதலீடு செய்ய வர்மா என்ற ஒரு பெரிய தொழில் அதிபர்  முன் வந்தார். ஆயினும் வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப உதவி பெற அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது.

இந்த அனுமதியைத் தரும் அதிகாரம் பெற்ற அமைச்சர் ஒரு பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்டார். வேணுகோபால் பிடிவாதமாக மறுத்து விட்டார். 

அப்போது வர்மா வேணுகோபாலை நேரில் சந்தித்து லஞ்சத்  தொகையைத் தானே கொடுத்து விடுவதாகச் சொன்னார்.

"உங்கள் கொள்கைக்கு ஒரு ஊறும் வராது. இந்தப் பணத்தை நாங்கள் வேறு வகையில் ஏற்பாடு செய்து கொள்வோம். உங்களைப் பொருத்தவரை நீங்கள் லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை!" என்றார் வர்மா.

வேணுகோபால் இதற்கு இணங்கவில்லை. "நீங்கள் கொடுத்தால் என்ன, நான் கொடுத்தால் என்ன, லஞ்சம் லஞ்சம்தானே?" என்றார்.

வேணுகோபாலின் பிடிவாதத்தால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. 

சில மாதங்களுக்குப் பிறகு வேணுகோபாலுடன் இணைந்து முதலீடு செய்வதாகச் சொன்ன வர்மா அதே வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்தத் தொழிற்சாலையை வேறொரு மாநிலத்தில் துவங்கி விட்டார். அரசு அங்கீகாரம் அவருக்கு எப்படிக் கிடைத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை!

வேணுகோபாலுக்கு இது ஒரு பெரிய  ஏமாற்றம். இந்தத் தொழிலைத் துவங்கி இருந்தால் அகில இந்திய அளவில் அவர் ஒரு மிகப் பெரிய தொழில் அதிபராக வளர்ந்திருப்பார்.

ப்போது அவர் வயது எண்பது. அவர் தொழில் துவங்கி ஐம்பது வருடங்கள் ஆகி விட்டன. 

அவரது பெரிய தொழில் முயற்சி தோல்வி அடைந்த இந்த இருபது வருடங்களில் அவர் எவ்வளவோ வளர்ச்சி கண்டிருந்தாலும் தோல்வியின் வலி அவருக்கு இருந்து  கொண்டே இருந்தது. 

நேர்மையாக இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக வாழ்ந்தது தவறோ என்று  சில சமயம் தோன்றும்.
ன்று மத்திய அரசின் தொழில்துறைச் செயலாளரிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னணித் தொழில் அதிபர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து தொழில் அதிபர்களில் வேணுகோபாலும் ஒருவர் என்ற செய்தியைச் சொன்னார் அவர்.

தன்னை விடப் பெரிய தொழில் அதிபர்கள் எத்தனையோ பேர் இருக்க, தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது வேணுகோபாலுக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. 

மற்ற ஒன்பது தொழில் அதிபர்கள் யார் என்பதயும் சொன்னார் செயலர். 

அந்தப் பட்டியலில் வர்மாவின் பெயர் இல்லை. மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருக்கும் சில முறைகேடுகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டதால் அவர் பெயர் பட்டியலில்  இடம் பெற வில்லை என்று வேணுகோபால் பிறகு தெரிந்து கொண்டார்.

குறள் 31:
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பொருள்:
அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும். இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு அறத்தை விட அதிக நன்மை அளிக்கக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


32. கைக்கு எட்டியது... 

"டேய் மச்சி, கொஸ்ச்சின் பேப்பர் லீக் ஆயிடுச்சுடுடா!" என்று குதித்துக் கொண்டே வந்தான் சதீஷ்.

"என்னடா சொல்றே?" என்றான் அரவிந்த்.

"ஆமாண்டா. ரொம்ப சீக்ரட். அம்பது பேருக்குத்தான் லீக் ஆன பேப்பர் கெடச்சுருக்கு -  இன்க்ளூடிங் மீ!".

"எப்படிடா? கவர்ன்மென்ட் சும்மா இருக்காதே!"

"நாளைக்குப் பரீட்சை. அவங்களுக்கு இன்னும் விஷயமே தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது. திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆயிரம் ரூபா கொடுத்து வாங்கி இருக்கேன். நீ  ஐநூறு ரூபா கொடுத்துடு."

"டேய் இதெல்லாம் வேண்டாண்டா! நாமதான் நல்லாப் படிச்சுக்கிட்டிருக்கோமே! இந்தக் குறுக்கு வழி எல்லாம் எதுக்கு?"

"உனக்குப் பணம் கொடுக்க இஷ்டம் இல்லேன்னா விட்டுடு. பேப்பரை உனக்கும் காட்டறேன். ஜிராக்ஸ் எடுக்க வேண்டாம். ரிஸ்க்."

"டேய்! நான் பணத்துக்காகச் சொல்லல்லே! இது மாதிரி குறுக்கு வழி எல்லாம் வேண்டாம்னு உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். ஒரு வேளை இந்த லீக் ஆன பேப்பரே போலியா இருந்தா? அல்லது பரீட்சையில் வேறே பேப்பர் வந்தா?"

"அதெல்லாம் வராது. இதுதான் வரப் போவுது. இதுக்கு மட்டும் ப்ரிபேர் பண்ணினா போதும்!"

"எனக்கு வேண்டாம். உனக்கும்தான் சொல்றேன். நாம ஏற்கனேவே படிச்சதை ரிவைஸ் பண்ணினாலே போதும். இதை நம்பி நீ ஏற்கனவே படிச்சதை ரிவைஸ் பண்ணாம கோட்டை விட்டுடாதே!"

சதீஷ் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை.

"து எப்படி ஐயா நடந்தது?" என்றார் டைரக்டர் கோபமாக. .

"அது இன்வெஸ்டிகேட் பண்ணினாதான் சார் தெரியும். நாளைக்கு எக்ஸாம். இப்ப நம்மால ஒண்ணும் பண்ண முடியாது."

"ஏன் பண்ண முடியாது? புதுசா வேற கொஸ்ச்சின் பேப்பர் ரெடி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?"

"கொஸ்ச்சின் பேப்பர் ஒரு மணி நேரத்தில ரெடி பண்ணிடலாம். ஆனா பிரின்ட் பண்ணி எல்லா சென்ட்டருக்கும் அனுப்ப வேண்டாமா?"

"மொத்தம்  எத்தனை சென்ட்டர் இருக்கு?"

"737 சென்ட்டர்."

" எல்லா சென்ட்டரிலும் இன்டர்நெட் கனெக்‌ஷனும் பிரின்ட்டரும் இருக்கு இல்ல?"

"இருக்கு... ஆனா..."

"சீஃப் எக்ஸாமினர் கிட்ட சொல்லி ஒரு மணி நேரத்துல புது பேப்பர் ரெடி பண்ணச் சொல்லுங்க. அத்தனை சென்ட்டரிலும் இருக்கிற எக்ஸாமினர்களுக்கும் பேப்பரை ஈமெயிலில்  அனுப்பி அவங்களுக்கு விவரமா இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துடுங்க. அவங்களுக்கு எத்தனை காப்பி தேவையோ அத்தனை காப்பி சென்ட்டரில் இருக்கற பிரின்ட்டர்ல பிரின்ட் எடுக்கச் சொல்லுங்க. பிரின்ட்டர் ஒர்க் பண்ணல பேப்பர் இல்லை இது மாதிரி பிரச்னை இருந்தா அவங்க சொந்தப் பொறுப்பில வெளிய போய் பிரின்ட் எடுக்கலாம். ஆனா அது நாளைப் பரீட்சைக்கான பேப்பர்னு யாருக்கும் தெரியக் கூடாது.

"ரெண்டு மூணு இடங்களைத் தவிர, சென்ட்டர்லேயே வேலை முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். பிரின்ட் எடுக்க யாராவது உதவியாளரைப் பயன்படுத்தினா அது வேறே ஏதோ பரிட்சைக்கான பேப்பர் என்கிற மாதிரி எண்ணத்தை உருவாக்கணும். இன்னி ராத்திரிக்குள்ளே எல்லாப் பேப்பரையும் ரெடி பண்ணி கவர்ல போட்டு சீல் பண்ணி அவங்க பொறுப்புல வச்சுக்கணும். செலவு முன்னே பின்னே ஆனால் பரவாயில்லை. பில்லை நமக்கு அனுப்பினா, நான் பாஸ் பண்ணி விடுவேன்னு சொல்லுங்க. இந்தப் பேப்பர் எங்கேயாவது லீக் ஆனா எக்ஸாமினர்தான் பொறுப்பு என்று கடுமையாச் சொல்லிடுங்க. ஏன் இப்படிச் செய்யறோம்னு காரணம் சொல்ல வேண்டாம். கேட்டா, புதுசா ஒரு ப்ரோஸீஜரை டெஸ்ட் பண்ணிப் பாக்கறோம்னு சொல்லுங்க. யாருக்காவது ஏதாவது சந்தேகமோ பிரச்னையோ இருந்தா, ராத்திரி எத்தனை மணியானாலும் எனக்கு நேரடியா ஃபோன் பண்ணலாம்னு சொல்லுங்க."

"சார், இது நடக்குமா?"

"நடந்தாகணும். பேப்பர் லீக் ஆகிச் சில பேர் அதனால பயன் பெறுவதை என்னால் அனுமதிக்க முடியாது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். ஈமெயிலைப் படிச்ச உடனே பதில் அனுப்பணும்னு எழுதுங்க. எல்லா எக்ஸாமினர்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி சீஃப்  எக்ஸாமினர் கிட்ட இருக்கும். அதன் மூலமா ஈமெயில் பார்க்கச் சொல்லித்  தகவல் அனுப்புங்க. ஒரு மணி நேரத்துக்குள் பதில் அனுப்பாதவங்களுக்கு ஃபோன் பண்ணி உடனே மெயிலைப் பாக்கச் சொல்லுங்க. நாளைக்கு மெயிலைப் பாக்கலேன்னு யாரும் சொல்லக்கூடாது."

"சரி சார். "

றுநாள் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பரீட்சை எழுத உட்கார்ந்த சதீஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நண்பன் சொன்னது போல் படித்தவற்றை ரிவைஸ் பண்ணாமல் பேப்பர் கிடைத்து விட்ட மிதப்புடன் இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று நொந்து கொண்டான் .

குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பொருள்:
அறவழியில் நடப்பதால் அதை விட நன்மை பயப்பது எதுவும் இல்லை. அறவழியிலிருந்து மாறுபட்டு நடந்தால் அதைப்  போல் கேடு விளைப்பது வேறு எதுவும் இல்லை.

33. இங்கே இப்படித்தான்! 

"இப்பல்லாம் அரசாங்க வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்புன்னு ஆயிடுச்சு. சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி உனக்கு அரசாங்க வேலை கிடைச்சிருப்பது பெரிய விஷயம். நம்பள மாதிரி சாதாரணக் குடும்பங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய அதிர்ஷ்டம். நல்லபடியா, பார்த்து நடந்துக்க" என்று அருணின் தந்தை  அவனுக்கு புத்தி சொல்லி அவனை வேலைக்கு அனுப்பி வைத்தார்.

அவன் அம்மா அவனைத் தனியாகக் கூப்பிட்டு, "டேய் அருண்! நீதி, நேர்மைன்னு சொல்லி உங்கப்பா தன்னோட வாழ்க்கையை வீணடிச்சுட்டாரு. நீயாவது புத்திசாலித்தனமா நடந்துக்க!" என்று அறிவுரை செய்து அனுப்பினாள்!

அலுவலகத்துக்குச் சென்று வேலை உத்தரவைக் காட்டி அருண் வேலையில் சேர்ந்தான். அவனை ஒரு இருக்கையில் உட்கார வைத்தார்கள்.

பக்கத்து சீட்டில் இருந்த நடராஜன் நடுத்தர வயதுக்காரர். ஆனால் அருணிடம் மிகவும் நட்பாகப் பழகினார். "பொதுவா பல அரசு அலுவலகங்கள்ள எல்லா ஊழியர்களும் உட்கார இடம் இருக்காது. உன்னை மாதிரிப் புதுசா வேலைக்குச் சேர்கிறவர்களுக்கு நிரந்தர சீட் கிடைக்க ரெண்டு மூணு வருஷம் கூட ஆகும். அது வரையில் மியூஸிகல் சேர் மாதிரி யாராவது லீவில போறவங்க சீட்டில மாத்தி மாத்தி உட்கார வேண்டியதுதான். ஆனா நம்ம ஆஃபீஸ்  அப்படி இல்லை. அந்த விதத்தில நீ அதிர்ஷ்டக்காரன்தான்!" என்றார்.

ஒரு வாரம் வரை அருணுக்கு என்ன வேலை, யார் மேலதிகாரி என்றே தெரியவில்லை. பிறகு ஒருநாள் ஒரு அதிகாரி அவனைத் தன் அறைக்கு அழைத்து அவன் தன் இலாகாவில்தான் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அவன் அவர் அறையில் இருந்தபோது அங்கே வந்த பியூனிடம், "செல்வம். இவரு என்னோட செக்‌ஷன்லதான் வேலை செய்யப் போறாரு. பாத்துக்க" என்றார்.

அதற்குப் பிறகும் அவனுக்கு வேலை எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் மாலையில் ஒரு அதிசயம் நடந்தது. பியூன் செல்வம் கையில் ஒரு பட்டியலுடனும் சில ரூபாய் நோட்டுக்களுடனும் வந்து, பட்டியலைப் பார்த்து விட்டு அவன் கையில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தான்.

"என்னங்க இது?" என்றான் அருண்.

"அதான் ரகு சார் சொன்னாரே, நீங்க அவரு செக் ஷன்ல வேலை செய்யப் போறதா?"

"அதுக்கு?"

"நான் போய் மீதிப் பேருக்கெல்லாம் பட்டுவாடா பண்ணணும். சார் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க" என்று சொல்லி நடராஜனைக் கை காட்டி விட்டு செல்வம் போய் விட்டான்.

"என்ன சார் இது?" என்றான் அருண் நடராஜனிடம்.

"இன்னைக்கு வெள்ளிக் கிழமை இல்லையா? அதுதான் பூஜை பண்ணிப் பிரசாதம் கொடுத்துட்டுப் போறாரு!" என்றார் நடராஜன், சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் சில நோட்டுக்கள் இருந்தன.

"பூஜையா?"

"தம்பி. இந்த ஆஃபீஸ்ல என்ன வேலை செய்யறோம்னு உனக்குத் தெரியும்ல? தினமும் நூறு இருநூறு பேரு வந்துட்டுப் போற ஆஃபீஸ் இது. டெய்லி கலெக் ஷனைச் சேர்த்து வச்சு வெள்ளிக்கிழமை அன்னிக்கு எல்லோருக்கும் விநியோகம் பண்ணுவாங்க. அதைத்தான் பிரசாதம்னு சொன்னேன். யாருக்கு எவ்வளவுங்கறதுக்கெல்லாம் கணக்கு இருக்கு! அதிகாரிகளுக்கு நிறைய வரும். நீங்க புதுசுங்கறதினால உங்களுக்குக் கம்மியாதான் வரும்."

"என்ன சார் நடக்குது இங்கே? இவ்வளவு வெளிப்படையாவா?"

"நமக்குள்ளதானப்பா?"

"நான் இன்னும் வேலை செய்யவே ஆரம்பிக்கலியே?"

"அதைப் பத்தி என்ன? உனக்குத்தான் செக்‌ஷன் குடுத்துட்டாங்களே? உனக்கும் பங்கு குடுக்கச் சொல்லி உன்னோட ஆஃபீஸர் சொல்லி இருப்பாரு!"

"ஓ! நான் அவர் ரூம்ல இருந்த போது இந்த செல்வத்துக்கிட்ட என்னைப் பத்திச் சொன்னாரு. இதுக்குத்தானா அது?"

அப்போது செல்வம் திரும்பவும் அங்கே வந்தான்.

அருண் அவரை அழைத்தான். "செல்வம் அண்ணே! இங்கே வரீங்களா?"

"என்ன? கம்மியா இருக்கா? அதையெல்லாம் உங்க ஆஃபீஸர் கிட்ட கேட்டுக்கங்க!"

"அதில்லை. எனக்கு இந்தப் பணம் வேண்டாம். இன்னிக்கு மட்டும் இல்ல, என்னிக்குமே வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.

"அவசரப்படாதே தம்பி" என்றார் நடராஜன். "இந்த ஆஃபீஸில பணம் இல்லாம எதுவுமே நடக்காது. இங்கே யாரும் பணம் வாங்காமயும் இருக்க முடியாது. மற்ற இடங்கள்ள நேர்மையா இருந்தவங்கள்ளாம் இந்த ஆஃபீஸுக்கு வந்த பிறகு மாறி இருக்காங்க. நான் கூட அப்படித்தான். உனக்கென்ன கஷ்டம்? நீ யார்கிட்டேயும் பணம் கேட்கப் போறதில்லே! யாரோ வசூல் பண்ணி உனக்கு ஒரு பங்கு வச்சுக்கன்னு உன் சீட்டுக்கு வந்து கொடுக்கறாங்க!"

"இல்லை சார். எந்த இடத்தில இருந்தாலும்  என்னோட இயல்புப்படி நேர்மையாத்தான் இருப்பேன். இது என் அப்பா எனக்குச் சொல்லித் தந்தது" என்றான் அருண்.

குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பொருள்:
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் செய்யும்  செயல்கள் அறச் செயல்களாகவே இருக்க வேண்டும்.('இந்த இடத்தில் இதெல்லாம் சரியாக வராது' என்று காரணம் சொல்லி அறத்திலிருந்து வழுவக்கூடாது.)


34. படிப்பது ராமாயணம்! 

அன்னதானம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. ராமலிங்கத்துக்குப் பெருமை தாங்கவில்லை.

"இந்த ஊர்ல உங்களை விட்டா இது மாதிரி நல்ல காரியங்கள் செய்ய வேறு யார் இருக்காங்க?" என்றார் கோவில் பூசாரி.

"பணம் சம்பாதிக்கிறதே அதை நல்ல வழியில் செலவழிக்கணும் என்கிறதுக்காகத்தானே? ஆத்தா குடுக்கறா. அதில கொஞ்சம் எடுத்து நான் மத்தவங்களுக்குக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!"

பெருமையுடன் பக்கத்தில் நின்ற மனைவியைப் பார்த்தார்.

"எல்லாரும் என்னை அன்னபூரணின்னு சொன்னதைக் கேக்க ரொம்பப் பெருமையா இருந்ததுங்க" என்றாள் மரகதம்

"பாத்தியா பூசாரி? காசு செலவழிச்சு எல்லா ஏற்பாடும் பண்ணி அன்னதானத்தை நடத்தினது நான். ஆனா பளபளன்னு ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு வந்து பத்து நிமிஷம் என் பக்கத்தில நின்னு வேடிக்கை பாத்துட்டு எங்க வீட்டு அம்மா அன்னபூரணினு பேரை வாங்கிட்டுப் போயிடறாங்க!" 

"அப்ப நான் ஒண்ணுமே பண்ணலையாக்கும்?" என்று பொய்க் கோபத்துடன் அங்கிருந்து விலகி சற்று தூரத்தில் போய் நின்று கொண்டாள் 'அன்னபூரணி. ' பூசாரியும் ஒரு  கும்பிடு போட்டு விட்டு விடை பெற்றுக்கொண்டார்.

இதற்காகவே காத்திருந்த மாதிரி எங்கிருந்தோ விரைந்து அவர் அருகில் வந்து நின்றான் அவரது ஆள் வெள்ளையன்.

"என்னடா வெள்ளையா எங்கே போயிட்டே? அன்னதானத்தின்போது உன்னைக் காணுமே? பண்ணையிலே ஏதாவது பிரச்னையா?" என்று விசாரித்தார் ராமலிங்கம். 

"பண்ணையிலே இல்லை ஐயா"  என்று ஆரம்பித்தவன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "ஏங்க பண்ணை வீட்டுக்கு யாரையாவது வரச் சொல்லியிருந்தீர்களா?" என்றான்.

"இல்லையே!" என்ற ராமலிங்கம் டக்கென்று நினைவு வந்தவராகக் கையை சொடக்கிக் கொண்டார். "ஐயையோ! அன்னதானத் தேதி ஞாபகம் இல்லாமல் இன்னைக்கு அந்தப் பிரமீளாவை வரச் சொல்லியிருந்தேனே! வந்திருந்தாளா?"

"ஆமாங்க. நீங்க வர மாட்டீங்கன்னு நான் சொல்லியும் அந்தப் பொம்பளை போகாம ரெண்டு மணி நேரம் உக்காந்துட்டுத்தான் போச்சு. 'அவரு வந்தாலும் வராட்டாலும் நான் ஒப்புக்கொண்ட நேரத்துக்கு இருந்துட்டுத்தான் போகணும்'னு சொல்லுது."

"இதைச் சொல்லி வேலை செய்யாமலேயே எங்கிட்ட பணம் வாங்கிடணும்னு பாக்கறா போலிருக்கு. ஆனா நான் பணம் கொடுத்துத்தான் ஆகணும். இல்லாட்டா மார்க்கெட்டுல என் பேரைக் கெடுத்துடுவா!" என்று சிரித்தார் ராமலிங்கம். "ஆகக்கூடி உன்னை அன்னதானத்துக்கு வர முடியாம அவளுக்குக் காவலா அங்கியே உக்காரும்படி பண்ணிட்டா! சரி. சாப்பாடு மீதி இருக்கும். நீ உள்ள போய்ச் சாப்பிடு" என்றார்.

வெள்ளையன் உள்ளே போகத் திரும்பிய உடனேயே அருகில் யாரோ தொண்டையைச்   செருமுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார்.

மரகதம்! 

சற்று தூரத்தில் தள்ளி நின்றிருந்த இவள் எப்போது இங்கே வந்தாள்? தான் வெள்ளையனுடன் பேசியதைக் கேட்டிருப்பாளோ?

அவள் முகத்தைப் பார்த்தார். அவளுடைய முகக்குறிப்பிலிருந்து எதுவும் தெரியவில்லை. அவளாகக் கேட்டாலே ஒழிய இதைப்பற்றி அவளிடம் கேட்கக் கூடாது. இனிமேல் யாரிடமாவது பேசும்போது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.

மரகதம் இரண்டு மூன்று முறை தொண்டையைச் செருமி விட்டு, நெஞ்சிலிருந்த கோழையை வாய்க்குக் கொண்டு வந்து மணல் தரையில் காறித் துப்பினாள்.

குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற

பொருள்:
மனதில் எந்தத் தவறான எண்ணங்களும் இல்லாமல் தூய்மையாக இருப்பதுதான் அறம். மற்ற எதையுமே அறம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

35. துறவியின் முடிவு 

ஆத்மானந்தா தனது மூத்த சீடர்களான அருளானந்தா, அன்பானந்தா ஆகிய இருவரையும் தனியே அழைத்தார்.

"எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிறகு இந்த மடத்துக்குத் தலைமை தாங்கி நமது ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய பொருத்தமான ஒரு நபரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த மடத்தில் இருக்கும் துறவிகளுக்குள் நீங்கள் இருவரும்தான் மூத்தவர்கள். அதனால்தான் உங்களிடம் இதை முதலில் சொல்ல வேண்டும் என்று உங்களை அழைத்தேன். எனக்குப் பிறகு இந்தப் பீடத்தின் தலைமைப் பதவிக்குப் பரமானந்தாவை நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

இருவருமே பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர்.

ன்று இரவு ஆத்மானந்தரை அன்பானந்தா தனியாகச் சந்தித்தார்."ஸ்வாமி, உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

"சொல் அன்பானந்தா!"

"நீங்கள் என்னுடைய குரு. உங்கள் முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன். ஆயினும் உங்களுக்கு வாரிசாக, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவனான என்னை நியமிக்காமல், எனக்குப் பின்னால் இந்த மடத்தில் சேர்ந்த பரமானந்தரை நியமித்தது ஏன் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"அன்பானந்தா, வயது, அனுபவம் இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுப்புகளைக் கொடுப்பதற்கு இது அரசாங்க அலுவலகம் இல்லை. என் முடிவுக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி விட்டு ஏன் இப்படிக் கேட்கிறாய்?"

"என்னிடம் என்ன குறை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத்தான்."

" 'பரமானந்தரிடம் என்ன விசேஷத் தகுதி இருக்கிறது?' என்று கேட்காமல் 'என்னிடம் என்ன குறை?' என்று நீ கேட்பதிலிருந்து உன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நீ நினைக்கிறாய் என்று தெரிகிறது. உன்னிடம் இருக்கும் முதல் குறை ஆசை."

"முதல் குறையா? அப்படியானால் என்னிடம் நிறையக் குறைகள் இருக்கின்றனவா?"

"பார்த்தாயா உன்னிடம் பல குறைகள் இருப்பதாக நீயே நம்புகிறாய்! இரண்டு குறைகள் இருந்தால் கூட முதல், இரண்டாவது  என்று சொல்லலாமே! சரி. ஆசை என்ற இந்தக் குறை உன்னிடம் இருப்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?"

"நான் ஆசை உள்ளவன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இந்த மடத்தின் தலைவர் என்ற பதவி உனக்கு வேண்டும் என்ற ஆசையினால்தானே என்னிடம் வந்திருக்கிறாய்?"

"சரி. வேறு என்ன குறைகள் கண்டீர்கள் என்னிடம்?"

"உனக்கு இந்தப் பதவியின் மீது ஆசை. அது உனக்குக் கிடைக்காமல் பரமானந்தனுக்குக் கிடைக்கப் போகிறது என்பதால் அவன் மீது பொறாமை!"

"இதவும் உங்கள் ஊகம்தானே?"

"ஒருவரின் பேச்சு, செயல்கள் இவற்றிலிருந்து அவரது மனதில் என்ன இருக்கிறது என்று கணிக்கலாமே! நீயும் அருளானந்தனும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இந்த மடத்தில் சேர்ந்தவர்கள். அருளானந்தனுக்கு ஏன் இந்தப் பதவியைக் கொடுக்கவில்லை என்று நீ கேட்கவில்லை. ஏன், உனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கூடக் கேட்கவில்லை! பரமானந்தனுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்றுதானே கேட்கிறாய்? அதனால்தான் பொறாமை என்று சொன்னேன்."

அன்பானந்தா மௌனமாக இருந்தார்.

"அன்பானந்தா. உன்னிடம் குற்றம் காண்பதற்காக நான் இவற்றைச் சொல்லவில்லை. இந்தக் குறைகள் உன்னிடம் சமீபத்தில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன. நான் என் வாரிசாக யாரை நியமிக்கப் போகிறேன் என்று சொல்வதற்கு முன் உன் மனதில் இந்த ஆசை இல்லாமல் கூட இருந்திருக்கலாம். உன்னிடம் இந்த இரண்டு குறைகளுடன் தொடர்புடைய இன்னும் இரண்டு குறைகள் இல்லை. அது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்."

"அவை என்ன குறைகள் குருவே?"

"தான் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் ஒரு மனிதனுக்குக் கோபம் வரும். கோபத்தினால் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் செயல்களைச் செய்வான். நீ அமைதியாக இருப்பது உனக்குக் கோபம் இல்லை என்று காட்டுகிறது. நான் உன்னிடம் குறைகள் இருப்பதாகச் சொன்னபோது உனக்கு வருத்தம் ஏற்பட்டதே தவிரக் கோபம் வரவில்லை. நீ துறவு நிலையில் நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. ஆசை ஏற்பட்டால், அதிலிருந்து பொறாமை, கோபம், கோபத்தினால் பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்றவை தொடரும். அதனால் நீ ஆசையைக் கைவிட வேண்டும். துறவியான உனக்குப் பற்றற்று இருப்பது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை."

"நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் குருவே! என் குறையை நான் உணர்கிறேன். பரமானந்தருக்கு நீங்கள் தலைமைப் பதவி கொடுப்பது பற்றி எனக்கு வருத்தம் இல்லை" என்று எழுந்தார் அன்பானந்தா.

"கொஞ்சம் இரு அன்பானந்தா. நீ இவ்வளவு சீக்கிரம் நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு உன்னை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் பரமானந்தருக்குத் தலைமைப் பொறுப்பை அளிக்கப் போவதில்லை."

"அருளானந்தருக்கு அளிக்கப் போகிறீர்களா? அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான்."

"உன்னுடைய மனமுதிர்ச்சியைப பாராட்டுகிறேன். பரமானந்தருக்கு இந்தப் பதவி இல்லை என்றதும், 'ஒருவேள எனக்குக் கிடைக்குமோ?' என்று ஒரு கணம் கூட நினைக்காமல் அருளானந்தரின் பெயரைச் சொல்கிறாயே!"

"இல்லை குருவே. நீங்கள் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தாலும் நான் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆசையை அடக்குவதில் நான் இன்னும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்."

" நீயும் அருளானந்தனும் நல்ல சீடர்கள்தான். உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் தலைமைப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும். பரமானந்தனுக்குக் கொடுக்கப் போவதாகச் சொன்னால் அதை நீங்கள் இருவரும் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று பார்க்கத்தான் அப்படிச்  சொன்னேன். அருளானந்தன் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. என் முடிவை அமைதியாக ஏற்றுக்கொண்டு விட்டான். அதனால் அருளானந்தனுக்குத்தான் இந்தப் பதவியைக் கொடுக்கப் போகிறேன். சிறிது காலம் கழித்து உன்னை நமது மடத்தின் இன்னொரு கிளைக்குத் தலைவராக அனுப்பி விடுகிறேன்."

"நன்றி குருவே. ஆனால் அருளானந்தரின் கீழ் பணி புரிய எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது என்னை இன்னும் பக்குவப்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் அவருக்கு உதவியாக அவர் விரும்பும் வரை இங்கேயே பணி புரிகிறேன்" என்றார் அன்பானந்தா.

குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்:
பொறாமை, ஆசை, கோபம், பிறர் மனம் புண்படப் பேசுதல் ஆகிய நான்குக்கும் இடம் கொடுக்காமல் நடந்து  கொள்வதே அறம்.

36. இன்றே செய்க 

நாகராஜனுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது. ஆசை என்பது பொருத்தமான வார்த்தை இல்லை. ஆனால் இதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நாகராஜன், 'எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஆசை' என்றுதான் சொல்வார்.

தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. தன்னுடைய கல்வியறிவு, பண்பாடு, முன்னேற்றம் இவற்றுக்கெல்லாம் தான் படித்த பள்ளிதான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்ற நன்றி உணர்வு அவருக்கு எப்போதுமே உண்டு. அந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாகப் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போனபோது, தான் படித்த பள்ளிக்குச் சென்றார். அப்போது அங்கே தலைமையாசிரியராக இருந்தவரைச் சந்தித்துத் தன்னை ஒரு பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது தலைமையாசிரியர்  ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அந்தப் பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. அங்கே பத்தாம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் கிடையாது. ஆனால் பதினொன்றாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் கல்விக் கட்டணம் உண்டு.

மிகக் குறைந்த கட்டணம்தான் என்றாலும் அங்கே பத்தாவது வரை படித்த மாணவர்கள் பலருக்கு அந்தக் கட்டணத்தைக் கூடக் கட்டிப் படிக்கும் வசதி இல்லை என்பதால் பலர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுவதாகச் சொன்ன தலைமை ஆசிரியர், அவரைப் போன்ற பழைய மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அளித்தால், அதை வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கில் போட்டு அதிலிருந்து வரும் வட்டி மூலம் சில ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அதிலிருந்து பெறலாம் என்றார். தன்னால் முடிந்ததைச் செய்வதாகச் சொல்லி விட்டு நாகராஜன் ஊர் திரும்பினார்.

தான் தொடர்பு வைத்திருக்கும் பள்ளித் தோழர்களை அணுகி இது பற்றிப் பேசினார். அவர்கள் யாரும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தன் சொந்த முயற்சியில் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தார். அவரது பொருளாதார நிலை ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தே இருந்தார். மாதாமாதம் ஒரு சிறு தொகை சேமித்துப் பார்த்தார். அது போதாது என்று தெரிந்தது.

இந்நிலையில் அவரது ஒரே மகனின் படிப்பு முடிந்து அவனுக்கு மிக நல்ல வேலை கிடைத்தது. சில மாதங்கள் கழித்து, வேலையில் அவன் நிலை பெற்ற பிறகு அவனிடம் தன் ஆசையைச் சொன்னார்.

"அப்பா! நான் இப்பதான் வேலையில் சேர்ந்திருக்கேன். என்னால இப்ப எதுவும் செய்ய முடியாதே!" என்றான்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். நீ இப்ப உன் சொந்தக் கால்ல நிக்கறே. நான் ரிடையர் ஆனதும் வரும் பி.எஃப் பணம் எனக்கும் உன் அம்மாவுக்கும் போதும். இதைத் தவிர, நான் வாலண்டரி பி.எஃபில் கொஞ்சம் பணம் போட்டுட்டு வந்திருக்கேன். அதில ஒரு அஞ்சு லட்ச ரூபாய் வரும். அதை நான் என் பள்ளிக்கூடத்துக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுல உனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?" என்றார்.

"அப்பா. அது உங்க சேமிப்பு. நீங்க எப்படி வேணும்னா பயன்படுத்திக்கங்க. உங்க சேமிப்புப் பணம் எதையும் நான் எதிர்பார்க்கலே! காலம் முழுக்க உங்களைப் பாத்துக்கறது என்னோட பொறுப்பு" என்றான்.

"எதையும் நல்லா யோசனை பண்ணிச் செய்யுங்க!" என்றாள் அவர் மனைவி.

நாகராஜன் அலுவலகத்தில் பேசித் தனது வி.பி.எஃப் சேமிப்பில் இருந்த ஐந்து லட்சத்து சொச்சத்தைப் பெற்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னபோது அவர் மகிழ்ந்து, அன்றைய கட்டணங்களின் அடிப்படையில் ஐந்து லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பில் போட்டால், அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து நான்கு மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்த முடியும் என்றார். அடுத்த நாள் பாங்க்கில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து அனுப்புவதாகச் சொன்னார் நாகராஜன் .

அன்று இரவு நாகராஜனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாள் நினைவு திரும்பியதும், நாகராஜன் மகனிடம் முதலில் கேட்டது பாங்க் டிராஃப்ட் எடுப்பதைப் பற்றித்தான்.

"அதற்கென்ன அப்பா? நீங்கள் குணமாகி வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றான் அவர் மகன்.

"நல்ல காரியங்களைத்  தள்ளிப் போடக்கூடாது. நான் ஏற்கெனவே ரொம்ப டிலே பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நான் செக்குல கையெழுத்துப் போடறேன். நீ பாங்க்கில போய் டிடி வாங்கி இன்னைக்கே கூரியர்ல அனுப்பிடு!" என்றார்.

"சரி."

டிடி எடுத்து அதைப் பள்ளிக்கு கூரியரில் அனுப்பி விட்டதாக அன்று பிற்பகல் அவரிடம் சொன்னான் அவர் மகன். அதைக் கேட்டதுமே அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. உடல் நிலை சரியாகி விட்டது போல் இருந்தது.

அன்று இரவு நாகராஜன் மருத்துவமனையில் இறந்து போனார்.

குறள் 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நற்செயல்களைச் செய்ய வேண்டும்.  ஒருவர் மறைந்த பிறகு கூட, அவர் செய்த நற்செயல்கள் அவருக்கு அழியாத புகழைத் தரும்.

37. பல்லக்குத் தூக்கிகள்!

"டிரைவர்! எங்கே போயிட்டே? கார் ரெடியா?"

"ரெடிம்மா. எங்கே போகணும்?"

"பியூட்டி பார்லருக்கு."

"போகலாம்மா."

ரம்யா பியூட்டி பார்லரில் இருந்த இரண்டு மணி நேரமும் டிரைவர் பாஸ்கர் சற்று நேரம் காரில் உட்கார்ந்து தினத்தந்தி படித்தும், சற்று நேரம் தூங்கியும்,  வெளியே சற்று உலாவியும், ஒரு சிங்கிள் டீ, இரண்டு சிகரெட் குடித்தும் பொழுதைக் கழித்தான்.

ஒரு வழியாக ஒப்பனைகள் முடிந்து ரம்யா வந்து காரில் ஏறினாள். சில ஆயிரம் ரூபாய்கள் செலவழித்திருப்பாள் என்று தோன்றியது.

"வீட்டுக்குத்தானே?"

"இல்லை. என் ஃபிரண்ட் காவ்யா வீட்டுக்குப் போ!" என்று உத்தரவிட்டாள் ரம்யா. 'ஒப்பனை செய்து கொண்ட முக லட்சணத்தைத் தோழியிடம் காட்ட வேண்டுமாக்கும்!' பாஸ்கர் எரிச்சலுடன் காரைக் கிளப்பினான்.

சென்ற மாதம் வரை பாஸ்கர் பிரதீப்புக்குத்தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தான். இந்த மாதத்திலிருந்து பிரதீப்பின்  நிறுவனத்தில் அவனுக்கு ஒரு காரும் அதை ஓட்ட கம்பெனி செலவில் ஒரு டிரைவரும் கொடுத்து விட்டார்கள்.

அதிலிருந்து பாஸ்கர் பிரதீப்பின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கார் ஓட்ட வேண்டியதாகி விட்டது. குடும்ப உறுப்பினர்களின் ஆடம்பரமும், அதிகாரமும் பாஸ்கருக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வீட்டு நாயைக் காரில் அழைத்துச் செல்ல வேண்டிய கொடுமை!

அன்று இரவு அவன் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிய  போது ரம்யா அவனிடம், "பாஸ்கர்! நாளைக்குக் காலையில் பொம்மிக்கு வெடெர்னரி டாக்டரிடம் அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது. சீக்கிரமே வந்து விடு" என்றாள்.

அவன் மனைவியை டாக்டரிடம் அழைத்துச் செல்ல அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. பொம்மி என்ற நாயை மாதாந்தர மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அவன் சீக்கிரமே வேலைக்கு வர வேண்டுமாம்! கொடுமை இல்லையா இது?

வீட்டுக்குப் போனபோது மனைவி மிகவும் உற்சாகமாக இருந்தாள்.

"என்ன விஷயம். இவ்வளவு சந்தோஷமா இருக்கே?"

"கோவிலுக்குப் போயிருந்தேன்."

"எப்பவும் போறதுதானே?"

"இன்னிக்குக் கோவில்ல ஒத்தரு கதை சொன்னாரு. அதைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"என்ன சொன்னாரு அப்படி?"

"பாவ புண்ணியங்களைப் பத்திப் பேசினாரு. சில பேரு வசதியா வாழறதுக்கும் சில பேரு கஷ்டப் படறதுக்கும் அவங்க போன ஜென்மத்திலியேயும் இந்த ஜென்மத்திலேயும் செஞ்ச நல்லது கெட்டதுதான் காரணமாம். சில பேரு ரொம்ப அதிர்ஷ்டசாலிகளா இருக்காங்கன்னா அவங்க போன ஜென்மத்தில செஞ்ச நல்ல காரியங்கள்தான் காரணமாம். அது மாதிரி சில பேரு கஷ்டப்படறதுக்குக் காரணம் அவங்க போன ஜென்மத்தில செஞ்ச தீவினைகள்தான் காரணமாம்" என்றாள் மனைவி.

"அப்படீன்னா நாமெல்லாம் போன ஜென்மத்தில பாவம் பண்ணி இருக்கமா?" என்றான் பாஸ்கர் எரிச்சலுடன்.

"நாம என்ன அந்த அளவுக்குக் கஷ்டப்படறமா என்ன?" என்றாள் மனைவி.

'ஆனா பொம்மி மட்டும் போன ஜென்மத்தில நெறையப் புண்ணியம் பண்ணி இருக்கணும்' என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர்.

குறள் 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பொருள்:
அறம் செய்வதால் என்ன பலன் விளையும் என்று எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. பல்லக்கில் உட்கார்ந்து போகிறவனையும், அதைத் தூக்கிச் செல்பவனையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

38. ரிஷிபத்தினி

"தன்மயி" என்று அழைத்தார் சத்வர்.

"வந்தேன் ஸ்வாமி."

"நான் யாகசாலைக்குக் கிளம்புகிறேன்."

"ஸ்வாமி, ஏதும் உண்ணாமல் நாள் முழுவதும் வெய்யிலிலும் மழையிலும் யாகம், யோகம் என்று உடலை வருத்திக் கொள்கிறீர்கள். இரவில் கொஞ்சம் பச்சைக்காய்களை உண்டு விட்டுச் சற்று நேரம் உறங்குகிறீர்கள். தூண் போல் இருந்த உங்கள் உடம்பு துரும்பாக இளைத்து விட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது."

"உடலை வருத்தி யாகம் செய்தால்தானே உயர்நிலையை  அடைய முடியும்? நீ என் உடல் வாடுவதை உணர்வது போல் பகவானும் உணர்வார். அப்போது அவர் என் முன் தோன்றி எனக்கு அருள் புரிவார். அப்புறம் நான் சொர்க்கம் புகுவேன். நீயும் என்னுடன் வருவாய். நம் இருவரையும் இந்திரன் மாலை மரியாதைகளோடு வரவேற்பான்."

முனிவர் கிளம்பி விட்டார்.

தன்மயி சுறுசுறுப்பானாள். பானையில் இருந்த அரிசியைக் கொஞ்சம் எடுத்து அந்த மண் குடிலில் இருந்த பல பொந்துகளிலும் போட்டாள். எறும்புகள் சாப்பிடும். எலிகள் கூடச் சாப்பிடும். சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே!

உலையில் கொஞ்சம் அரிசி வைத்தாள். அரிசி களைந்த நீரைக் கொல்லைப்புறம் போய் மாட்டுத் தொழுவத்தில் இருந்த தொட்டியில் கொட்டினாள்.

சாதம் வடித்ததும், முதலில், வடித்த கஞ்சியை எடுத்துக் கன்றுக்கு வைத்தாள். பின்பு சாதத்தில் கொஞ்சம்  எடுத்துப் பின்புறம் ஒரு மேடையில் காக்கைக்காக வைத்தாள்.

சாதப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தபோது அவளை எதிர்பார்த்து ஒரு பூனையும், நாயும் காத்திருந்தன. இரண்டுக்கும் தனித் தனியாக இரண்டு இடங்களில் தரையில் சாதத்தை வைத்தாள். அவை அதை ஆவலோடு உண்ணத் தொடங்கின.

காலியான பாத்திரத்தை, கழுவும் தொட்டியில் வைத்து விட்டு வெளியே வந்தாள். கணவர் சாப்பிட மாட்டார் என்பதால் அவளும் சாப்பிடுவதில்லை. சாதம் வடித்ததே காக்கைக்கும், பூனைக்கும், நாய்க்கும்தான்!

வாசலில், பக்கத்தில் இருந்த  குடில்களிலிருந்து சில பெண்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். தன்மயி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையை அசைத்தாள். அவர்கள் அவளுக்கு சைகை மூலம் நன்றி தெரிவித்து விட்டு தோட்டத்தில் விளைந்திருந்த காய் கனிகளைப் பறித்துக் கொண்டார்கள்.

தன்மயிக்கும் முனிவருக்கும் எந்தக் காய்கள் எத்தனை வேண்டும் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியும். அவற்றை மட்டும் விட்டு விட்டு மீதமிருப்பவற்றிலிருந்து தங்கள் வீட்டுத் தேவைக்கான காய் கனிகளைப் பறித்துக் கொள்வார்கள்!

மாமரக் கிளை ஒன்றிலிருந்து ஒரு பழத்தைக் கடித்துக் கொண்டிருந்த அணில் ஒன்று அவளைப் பார்த்து விட்டுத் தன் வாலை வேகமாக மரக்கிளையின் மீது அடித்தது.

தன்மயி உள்ளே  வந்தாள். பூஜையறையில் அமர்ந்து ஸ்தோத்திரங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

"தன்மயி!"

தன்மயி திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள். முனிவர் அதற்குள் திரும்பியிருக்க மாட்டார். அதுவும் இது அவர் குரல் இல்லையே! வேறு யார் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடப் போகிறார்கள்? பிரமையாக இருக்குமோ?

"தன்மயி!"

குரல் முன் பக்கத்திலிருந்தல்லவா வருகிறது? தன்மயி தன் முன்பிருந்த கடவுள் படத்தைப் பார்த்தாள். பத்ரி நாராயணரின் உருவப்படத்தில் சிறிய அசைவு தெரிந்தது. மின்னல் போல் ஒரு ஒளிக்கீற்றும் தோன்றி மறைந்தது .

'பத்ரி நாராயணரா பேசுகிறார்?'

"ஆமாம்" என்றது பத்ரி நாராயணரின் திருவுருவப்படம், அவள் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பதுபோல்!

"பத்ரி நாராயணா!" என்றாள் தன்மயி நம்ப முடியாமல். "அங்கே என் கணவர் உங்கள் தரிசனத்துக்காக யாகம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் முன் தோன்றுகிறீர்களே!"

"நீ செய்வதும் யாகம்தான். நீ வாழும் அற வாழ்க்கையே ஒரு யாகம்தான். உன் கணவருக்கான கடமைகளைச் செய்கிறாய். நீ சாப்பிடாமல் இருந்தாலும் உணவு சமைத்துப் பிற உயிர்களுக்கு வழங்குகிறாய். உன் தோட்டத்தில் விளையும் காய்கனிகளை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறாய். நாள் தவறாமல் நீ செய்யும் அறம் நீ கேட்காமலேயே பெரும் பயனை உனக்கு வழங்கும்.'

"எனக்கென்று எதுவும் வேண்டாம் நாராயணா! எல்லாப் பிறவிகளிலும் நான் என் கணவரோடு இணைந்து இருக்க வேண்டும். அவ்வளவுதான் நான் வேண்டுவது."

"அது மட்டும் நடக்காது தன்மயி!"

"ஏன் பரந்தாமா?"

"நீ தினமும் தொடர்ந்து செய்து வந்த அறத்தின் பயனாக இனி உனக்குப் பிறவி கிடையாது."

"என் கணவருக்கு?"

"அவன் தேவலோகத்தையல்லவா வேண்டுகிறான்? அவன் விருப்பப்படி அவனுக்கு தேவலோகம் கிடைக்கும். அங்கே சிறிது காலம் உல்லாசமாக வாழ்ந்து விட்டு அவன் கர்மங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்க வேண்டியதுதான்."

"அவருக்கும் பிறவி இல்லாமல் செய்ய முடியாதா?'

"அவன் விரும்புவதைத்தானே நான் கொடுக்க முடியும்?"

"நான் அவருடனேயே இருக்க விரும்பினால்?"

"அது இந்தப் பிறவியில் மட்டும்தான் சாத்தியம். உனக்கு மறு பிறவி இல்லை. உன் கணவனுக்கு மறு பிறவி உண்டு. அதனால் உங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு இந்தப் பிறவியிலேயே முடிந்து விடும். இது குறித்து நீ வருந்தத் தேவையில்லை இந்தப் பாசம், பிணைப்பு இதெல்லாம் இந்தப் பிறவியில் மட்டும்தான் உனக்கு இருக்கும். உன் கடமைகளை நீ தொடர்ந்து செய்து வா."

தான் கண்ணைத் திறந்து கொண்டே கனவு கண்டோமா அல்லது களைப்பால் கணநேரம் உறங்கிப் போய் அதில் கனவு வந்ததா என்று தன்மயியால் தீர்மானிக்க முடியவில்லை.

குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பொருள்:
ஒருவன் நாள் தவறாமல் அறச் செயல்களைச் செய்து வந்தால் அச் செயல் அவனுக்கு மறு பிறவி இல்லாமல் செய்யும்.

39. போலிகள் ஜாக்கிரதை! 

சோமசுந்தரம் பல வருடங்களாக ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார். அவர் கடையில் பொருட்கள் வாங்கினால் அது ஒரிஜினலாக இருக்கும் என்ற பெயர் இருந்ததால் அவரிடம் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வந்தனர்.

அவரது வியாபாரம் சிறிய முதலீட்டில் நடைபெற்றதாலும், லாப சதவீதம் குறைவு என்பதாலும் அவருக்கு சுமாரான வருமானமே கிடைத்து வந்தது. உண்மையாகக் கணக்குக் காட்டி விற்பனை வரி, வருமான வரி ஆகிய வரிகளை முறையாகக் கட்டி வந்தார். இதுவும் அவர் குறைவான வருமானத்துக்கு ஒரு காரணம்.

ஆயினும் சோமசுந்தரம் தனது சீரான வியாபாரம் குறித்தும், பெரிய விற்பனையாளர்கள் கூட அவர் பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்குத் தனக்கு இருக்கும் நற்பெயர் குறித்தும் மனத் திருப்தியுடனேயே இருந்தார்.

ஒருமுறை அவரது பழைய நண்பர் வீரமுத்து அவர் கடைக்கு வந்தார். நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்ததால் இருவரும் பல விஷயங்கள் பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

பேச்சு வியாபாரம் பற்றித் திரும்பியது. சோமசுந்தரத்தின் வியாபாரம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த பின் வீரமுத்து சொன்னார்: "என்னப்பா பிழைக்கத் தெரியாதவனா இருக்கியே? இத்தனை வருஷமா வியாபாரம் செஞ்சதுக்கு நீ இந்த ஏரியாவில ஒரு பெரிய கட்டடத்தையே வாங்கியிருக்கணும். ஆனா நீ இன்னும் வாடகை இடத்துல இருந்துக்கிட்டு பெட்டிக்கடை மாதிரி நடத்திக்கிட்டிருக்கே. பிளாட்ஃபாரத்தில வியாபாரம் செய்யறவங்க கூட கிடுகிடுன்னு முன்னுக்கு வந்துடறாங்க. நீ இன்னும் இப்படியே இருக்கியே!"

"என்ன செய்யறது? அதிகமா முதலிடு செய்ய என்கிட்டே பணம் இல்லே. வர லாபம் குடும்பச் செலவுக்குத்தான் சரியா இருக்கு. ஆனா எனக்கு இதில ஒண்ணும் வருத்தம் இல்லை. எனக்கு மார்க்கெட்டில நல்ல பேரு இருக்கு. வர வருமானம் எனக்குப் போதும்."

"உன் லாபத்தை சுலபமா அதிகரிக்க நான் ஒரு வழி சொல்றேன்" என்று வீரமுத்து தனது யோசனையைச் சொன்னார்.

"அதெல்லாம் வேண்டாம்ப்பா. டியூப்ளிகேட் பார்ட் எல்லாம் வித்தா என் பேர் கெட்டுப் போயிடும். என்னோட நல்ல பெயர்தான் எனக்கு இருக்கிற ஒரே சொத்து." என்றார் சோமசுந்தரம்.

"நீ பல பார்ட்களை விக்கறே. நான் சொல்றது ஒரு பார்ட்டைப் பத்தித்தான். இந்த பேரிங்கைப் பத்தி மட்டும்தான். உன் மொத்த பேரிங் விற்பனையில ஒரு பத்து சதவீதம் டியூப்ளிகேட் பேரிங்கைக் கலந்து வித்துடு. பேரிங் எல்லாம் அடிக்கடி உடையறது சகஜம்தான். சரியா ஆயில் போடாதது, வண்டியை ஒழுங்கா ஒட்டாதது மாதிரி காரணங்களால கூட பேரிங் உடையும்.

"பேரிங் உடைஞ்சா பெரும்பாலும் அதை யாரும் பெரிசு படுத்த மாட்டாங்க. அதோட இந்த டியூப்ளிகேட் பேரிங் எல்லாம் உனக்கு பில் இல்லாமலேயே சப்ளை பண்ண நான் ஏற்பாடு செய்யறேன். நீயும் பில் கேட்காத கஸ்டமர்களாகப் பாத்து இந்த பேரிங்குகளைத் தள்ளி விட்டுடு. வாங்கறது, விக்கறது ரெண்டுமே கேஷ். ஒங்கிட்ட ரிகார்டே இருக்காது.

"யாராவது வந்து பேரிங் உடைஞ்சு போச்சேன்னு கேட்டா அது உன் கடையில வாங்கினது இல்லேன்னு அடிச்சுச் சொல்லிடு. நூத்தில  ஒண்ணு ரெண்டு பேர்தான் அப்படி வந்து கேட்பாங்க. பில் கொண்டு வாங்க, மாத்தித் தரேன்னு சொன்னா போயிடுவாங்க. பில் வாங்கினமா இல்லையான்னே நிறைய பேருக்கு ஞாபகமே இருக்காது."

சோமசுந்தரம் "அதெல்லாம் வேண்டாம்ப்பா!" என்று முதலில் மறுத்தார். வீரமுத்து விடாமல் அவரிடம் பேசியதைத் தொடர்ந்து 'கொஞ்ச நாள் செஞ்சுதான் பாப்பமே! என்ன ஆயிடப் போவுது? ஏதாவது பிரச்னை வரும் போலத் தெரிஞ்சா உடனே நிறுத்திடலாம். நாம என்ன அக்ரிமென்ட்டா போடப் போறோம்?' என்று நினைத்து "சரி" என்றார்.

சோமசுந்தரம் டியூப்ளிகேட் பேரிங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்து  இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. வீரமுத்து சொன்னது போல் வருமானம் அதிகரித்தது. பிரச்னை எதுவும் வரவில்லை.

ஒரு நாள் ஒரு உடைந்த பேரிங்கைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தார். "சார், இதை உங்க கடையிலதான் வாங்கினேன். ஒரு வாரத்துக்குள் உடைஞ்சு போச்சு. மெக்கானிக் இது டியூப்ளிகேட்னு சொல்றாரு" என்றார்.

சோமசுந்தரம் தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு, பேரிங்கைக் கையில் வாங்கி உற்றுப் பார்த்தார். "ஆமாம். இது டியூப்ளிகேட் பேரிங்தான். ஆனா இது எங்க கடையில வாங்கினது இல்லையே. நாங்க ஒரிஜினல்தான் விக்கறது" என்றார்.

"இல்லை சார். நான்தான் வாங்கினேன். உங்க கடையிலதான் வாங்கினேன்."

"சரி. பில் குடுங்க. மாத்திக் கொடுக்கிறேன்."

"நீங்க பில் குடுக்கவே இல்லையே!"

"சாரி சார். நாங்க பில் இல்லாம விக்கறது இல்லை" என்றார் சோமசுந்தரம்.

வந்தவர் போய் விட்டார்.

இதற்குப் பிறகு சோமசுந்தரம் டியூப்ளிகேட் பேரிங்குகளை விற்பதை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைத்திருந்தார். வேறு யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் அவற்றை விற்கத் தொடங்கினார்.

ரு மாதத்துக்குப் பிறகு, அவருக்கு பார்ட்கள் சப்ளை  செய்யும் மும்பை நிறுவனத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரிடம் அடிக்கடி பேசும் அதிகாரிதான் பேசினார். ஆனால் இந்த முறை, ''எப்படி இருக்கிறீர்கள்?' என்ற விசாரிப்புகள் இல்லாமல் பேச்சைத் துவங்கினார்.

"மிஸ்டர் சோமசுந்தரம். நீங்கள் இருபது வருடங்களாக எங்கள் பொருட்களை விற்று வருகிறீர்கள். இதுவரை நம் இருவரிடையேயும் எந்தப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நீங்கள் டியூப்ளிகேட் பாகங்கள் விற்பதாக எங்களுக்கு ஒரு புகார் வந்தது.

"உங்களிடம் பில் இல்லாமல் பேரிங் வாங்கிய ஒருவர் பேரிங் உடைந்ததைப் பற்றி உங்களிடம் புகார் செய்தபோது, நீங்கள் அது  உங்கள் கடையில் வாங்கியதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் இது பற்றி எங்களிடம் புகார் செய்தபோது, முதலில் நாங்கள் அதை நம்பவில்லை. பிறகு அந்தப் புகார் உண்மையா என்று விசாரிப்பதற்காக எங்கள் ஆட்கள் சிலரை அனுப்பி  உங்கள் கடையில் இருந்து பேரிங் வாங்கச் செய்தோம். அவர்களில் இரண்டு பேருக்கு பில் இல்லாமல் நீங்கள் ட்யூப்ளிகேட் பேரிங் கொடுத்திருக்கிறீர்கள்."

"சார். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. எனக்குத் தெரியாமல் என் கடையில் வேலை செய்யும் ஆட்கள் யாராவது இதைச் செய்திருக்கலாம். நான் விசாரிக்கிறேன். இதை உடனே நிறுத்தச் செய்கிறேன்..."

"தேவையில்லை மிஸ்டர் சோமசுந்தரம். நாங்கள் தீர விசாரித்து விட்டோம். உங்களுக்கு இந்த டியூப்ளிகேட் பேரிங்குகளை சப்ளை செய்வது யார், ஒரு மாதத்துக்கு எத்தனை பேரிங் வாங்குகிறீர்கள் என்ற எல்லா விவரங்களையும் நாங்கள் சேகரித்து விட்டோம். இன்றிலிருந்து நீங்கள் எங்கள் நிறுவனத்தின்  டீலர் இல்லை. இது பற்றி எங்களிடமிருந்து முறையான கடிதம் உங்களுக்குத் தபாலில் வரும். ஏற்கெனவே நாங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள உங்கள் டீலர் டெபாசிட் தொகையை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்."

"சார். தெரியாமல் தவறு  செய்து விட்டேன். இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள். இனி இந்தத் தவறு நேராது. இருபது வருடங்களாக நான் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறேன்..."

"என் தனிப்பட்ட வருத்தம் அதுதான் சார். இருபது வருடங்களாக நீங்கள் காப்பாற்றி வந்த நேர்மையை இரண்டே மாதங்களில் தொலைத்து விட்டிர்களே! உங்களோடு இத்தனை வருடங்கள்  பழகியவன் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குட் லக்."

உரையாடல் முடிந்தது. உரையாடல் மட்டும்தானா?

குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.

பொருள்:
அறநெறியில் செயல்படுவதன் மூலம் வருவதுதான் இன்பம். அறத்துக்கு மாறாகச் செயல்பட்டால்   நன்மையும்   கிடைக்காது, நற்பெயரையும் இழக்க நேரிடும். 

40. ஒரு  முறை 

ஒரு பெரிய நிறுவனத்தின் கிளை மேலாளராக இருந்த சந்திரசேகர் திறமையான நிர்வாகி என்பதுடன் நேர்மையானவர், ஊழியர்களிடம் கண்டிப்போடு கனிவையும் காட்டுபவர் என்றும் பெயர் பெற்றவர். எந்த ஊழியரும் அவரை அணுகித் தனது பிரச்னை பற்றிப் பேசலாம். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வார்.

ஒய்வு பெற இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில் அவருக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டது.

அவருக்குக் கீழ் பணி புரியும்  பெண் அதிகாரி சரளா அவர் அறையில் அமர்ந்து அவருடன் அலுவலக விஷயமாகப் பேசி விட்டு அவர் அறையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தபோது, சந்திரசேகர் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவளைப் பின்புறத்திலிருந்து கட்டித் தழுவினார். அதிர்ச்சி அடைந்த சரளா தன்னை விடுவித்துக்கொண்டு, "என்ன சார் இது?" என்றாள்.

"ஐ ஆம் சாரி. ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டேன்!" என்றார் சந்திரசேகர். அவருக்கே தான் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்று புரியவில்லை. பல காலமாக அவள் மீது தன் அடிமனதில் இருந்த சபலம்தான் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

"ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவளிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது போலிருக்கிறது உங்களுக்கெல்லாம்!" என்றாள் சரளா அதிர்ச்சியும் கோபமும் அடங்காமல்.

"அப்படி இல்லை. என்னை அறியாமல் இப்படி நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்."

"அது அவ்வளவு சுலபம் இல்லை. இதற்கு நீங்கள் நிச்சயம் பதில்  சொல்ல வேண்டி இருக்கும். நாளை எம்.டி. வருகிறார் இல்லையா? அவரிடம் முறையிடப் போகிறேன்."

சந்திரசேகர் செய்வதறியாமல் நின்றார்.
ன்று இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. 'இத்தனை வருடங்களாக நல்லவர், நேர்மையானவர், நியாயமாக நடப்பவர், பண்பாளர் என்றெல்லாம் பெயர் எடுத்தது இதற்குத்தானா? நாளை உண்மை தெரிந்தால் என்ன ஆகும்?

'எம்.டியின் முகத்தில் எப்படி விழிப்பது? மற்ற ஊழியர்களை எப்படி எதிர் கொள்வது? மனைவி, மகன், மகளுக்கெல்லாம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?

'கடவுளே! ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன்? உடலில் ஏதோ ஒரு ஹார்மோன் சட்டென்று அளவுக்கு அதிகமாக ஊறியதால் இப்படிச் செய்து விட்டேனா?'

தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தார். ஆனால் எப்படிச் செய்து கொள்வதென்று தெரியவில்லை. ரொம்ப நேரம் கழித்துக் களைப்படைந்து கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. எல்லா ஊழியர்களும் கூடி நிற்க, எம்.டி. பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க, சரளா அவரைச் செருப்பால் அடிக்கிறாள். அதைப் பார்த்து எம்.டியும் மற்றவர்களும் கை தட்டுகிறார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தார். அதற்குப் பிறகு தூக்கம் வரவில்லை.
றுநாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கினார் சந்திரசேகர். எம்.டி.யுடனான கலந்துரையாடல், மற்ற அலுவல்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டிருந்தபோது மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. 'எப்போது குண்டு வெடிக்கப் போகிறதோ?'

எம்.டி. கூடக் கேட்டார். "என்ன மிஸ்டர் சந்திரசேகர், உடம்பு சரியில்லையா? டல்லாக இருக்கிறீர்களே?"

"ஆமாம்" என்றார் சந்திரசேகர் சுருக்கமாக.

பொதுவாக எம்.டி. அந்தக் கிளை அலுவலகத்துக்கு வரும்போது சில ஊழியர்களைத் தனியே சந்தித்துப் பேசுவார். சந்திரசேகர் அப்போது அறைக்குள் இருப்பதில்லை.

"நீங்களும் இருங்கள்" என்று எம்.டி. பலமுறை சொன்ன போதும், "இல்லை. நான் இல்லாதபோதுதான் அவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். என் மீது அவர்களுக்கு ஏதாவது குறை இருக்கலாம். அதை உங்களிடம் அவர்கள் சொல்லட்டும். கம்பெனியின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது" என்று சொல்லி இருக்கிறார்.

அவருடைய இந்தப் பண்பான அணுகுமுறை அவர் மீது எம்.டி.க்கும் , ஊழியர்களுக்கும் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது. ஆயினும் இதுவரை அவர் மீது எந்த ஊழியரும் குறை கூறியதில்லை.

ஏன் இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கினோம் என்று இப்போது அவர் நொந்து கொண்டார். 'இதனால் சரளாவுக்கு எம்.டி.யிடம் தனியே பேசும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொடுத்து விட்டேனே! நான் எம்.டியின் பக்கத்தில் இருந்தால் என் மீது புகார் சொல்ல சரளாவுக்கு தைரியம் வராது!'

அன்றும் சில ஊழியர்கள் எம்.டி.யிடம் தனியாகப் பேசி விட்டு வந்தனர். பெரும்பாலானோர் இந்த சந்தர்ப்பத்தை எம்.டி.யுடன் தங்களை நெருக்கமாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

அவர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அவற்றை அவரிடமே சொல்லி விடுவார்கள். எம்.டி.யிடம் சொல்ல அவர்களுக்குக் குறை இருக்காது. இன்றுதான் முதல் முதலாக ஒரு ஊழியர் அவர் மீது குறை சொல்லப் போகிறார்!

சரளா எம்.டி. அமர்ந்திருந்த அறைக்குள் நுழைவதை வெளியே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர். குண்டு வெடிக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன! சில மணித் துளிகளைப்  பல மணிகளாக அவர் கழித்தபின் சரளா வெளியே வந்தாள்.

தனக்கு அழைப்பு வரும் என்று சந்திரசேகர் காத்திருந்தார். மேலும் சில ஊழியர்கள் எம்.டி.யைப் பார்த்துப் பேசி விட்டு வந்தனர். 'எல்லோரையும் பார்த்து முடித்து விட்டு அப்புறம் என்னிடம் பேசப் போகிறாரோ?'

ஒரு வழியாக ஊழியர்கள் சந்திப்பு முடிந்தது.

"சார் எம்.டி. உங்களை வரச் சொல்கிறார்" என்று அறிவித்தான் பியூன்.

அடுத்த சில நிமிடங்களில் தன் கௌரவம், தன்மானம், பதவி, அதிகாரம், வாழ்க்கை எல்லாம் என்ன கதிக்கு ஆளாகப் போகின்றனவோ என்று பதைபதைத்தபடி உள்ளே போனார் சந்திரசேகர். 

எம்.டி. அவரிடம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார். 'கிளம்புவதற்கு முன் குண்டை வீசி விட்டுப் போகலாம் என்று இருக்கிறாரோ?'

ஆனால் எம்.டி. ஊருக்குக் கிளம்பும் வரை அவரிடம் இது பற்றி  எதுவும்  பேசவில்லை.

எம்.டி. கிளம்பிச் சென்று சில நிமிடங்கள் கழித்து சரளா அவர் அறைக்குள் வந்தாள்.

'உட்காருங்கள்" என்றார் சந்திரசேகர் தீனமான குரலில்.

ஆனால் சரளா உட்காரவில்லை.

"சார். உங்கள் மீது நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேன். இந்த அலுவலகத்தில் எல்லோருமே உங்களைக் கடவுள் மாதிரி நினைத்துப் போற்றுகிறார்கள். இந்த அளவுக்கு ஊழியர்களிடம் மதிப்பு, மரியாதை, எல்லாவற்றிற்கும் மேல் அன்பு இவற்றைச் சம்பாதித்து வைத்திருக்கும் வேறு யாராவது எந்த நிறுவனத்திலாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

"ஆனால் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த நீங்கள், நேற்று என்னிடம் நடந்து கொண்ட விதத்தால்,  என் கால் செருப்புக்கும் கீழே போய் விட்டீர்கள் (சந்திரசேகருக்குத் தான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது!) எம்.டி.யிடம் உங்களைப் பற்றிப் புகார் செய்யலாம் என்றுதான் நினைத்தேன்.

"நான் அப்படிச் செய்திருந்தால், இத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் நேர்மை, பண்பு ஆகியவற்றால் ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கட்டி உருவாக்கிய உங்கள் நற்பெயர், கௌரவம் எல்லாம் ஒரு நொடியில் தரை மட்டமாகி இருக்கும். அடிப்படையில் நல்ல மனிதரான உங்களுக்கு இப்படி ஒரு நிலையை உருவாக்க நான் விரும்பவில்லை.

"ஆனால் உங்களிடம் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஒவ்வொரு முறை உங்கள் அறைக்கு வரும்போதும் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து என் மனதைப் படபடக்கச் செய்யும். உங்களுக்கும் மனச் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.

"அதனால் என்னை பெங்களூர் கிளைக்கு மாற்றும்படி எம்.டி.யிடம் கேட்டிருக்கிறேன். காரணம் எதுவும் சொல்லவில்லை. என் மாற்றல் உத்தரவு வரும் வரை உங்களிடம் இது பற்றிப் பேச வேண்டாம் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று நடந்ததை மறந்து விட்டுப் பார்த்தால், நீங்கள் என்னிடம் பண்போடும், கனிவோடும், கருணையோடும் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காக என் நன்றி."

சரளா அவர் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அறையை விட்டு வெளியேறினாள். சந்திரசேகருக்கு அவள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது.

குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

பொருள்:
ஒருவர் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது அற வழியில் நடப்பது மட்டுமே. செய்யக் கூடாதது கெட்ட பெயரை உண்டாக்கும் செயல்களையே.


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால் 

6 comments:

  1. வணக்கம் அய்யா.

    எனது பெயர் மு.ரங்கராசு இயற்கை விவசாயி. எனக்கு நமது தமிழ் மொழியின் மீதும் அதன் சிறப்புகள் மீதும் மிகவும் ஆர்வம்.

    அதனால் நமது செந்தமிழை என்னால் இயன்றவரை தேடித் தேடி கற்றுக்கொண்டு வருகிறேன்.

    திருக்குறளை கதை வாயிலாக நமது சொந்தங்களிடத்து யாவரும் புரியும் வன்னம் எளிய முறையகல் கொண்டு சேர்க்லாம், என்று வலை தளத்தில் வெகுநேரம் தேடைலை மேற்கொண்ட போது அறிய பொக்கிசம் ஒன்றை கற்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த அடியேனுக்கு கிட்டியது அந்த மகத்தான கற்றல் விடயம் தான் அய்யா உங்களின் "திருக்குறள் கதைகள்".

    அய்யா உங்கள் திருக்குறள் கதைகள் மிகவும் மிகவும்...... அருமையாக உள்ளது.

    உங்களைப் போன்ற அறிய சிந்தனைகளை, அறிய நேர்ந்தது நான் செய்த பெரும் பாக்கியம்.

    மன்னிக்கவும் அய்யா நான்,

    கடந்த நாற்பது நாட்களாக உங்கள் திருக்குறள் கதைகளை எனது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் பகிரி வாயிலாகப் பகிர்ந்து வருகிறேன்.

    உங்களிடம் அனுமதி கேட்காமல் உங்களது கருத்துக்களை (அறிய சிந்தனைகளை) பகிந்து விட்டேன்
    நான் மேற்கொண்டு தொடர்ந்து உங்கள் "திருக்குறள் கதைகளை" பதிவிட அனுமதி தருவீர்களா அய்யா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆர்வத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி. தாங்கள் என் வலைத்தளத்தை அவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். முதல் 12 அதிகாரங்களுக்கான 120 கதைகளைப் புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும். கதைகளை அனைவரும் இலவசமாக என் வலைத்தளத்தில் தொடர்ந்து படித்து வரலாம். மீண்டும், எனது நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      Delete
    2. மிக்க நன்றி அய்யா.

      என்னால் இயன்றவரை உங்கள் சீறிய சிந்தனைகளின் வெளிப்பாடான நமது திருமறை கதைகளை நமது உறவுகளிடத்தில் கொண்டு சேர்க்கின்றேன்.

      எமது இந்த நீண்ட நெடிய பயணத்தில் உங்கள் மாணவனாக பல ஆக்கச்சிந்தனைகளை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி ஆசான் அவர்களே.

      உங்கள் வழிகாட்டுதளின் அடிப்படையில் நானும் புதியவைகள் புனைய முழு முயற்ச்சியில் முனைகின்றேன் நன்றி ஐயா....

      Delete
    3. அய்யா புத்தகம் வெளியானதும் தகவல் தாருங்கள்...

      வாங்கிப் படிக்க பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

      Delete
  2. கதைகள் மிகவும் அருமையாக உள்ளது. புத்தவடிவில் உள்ளது எனக்கு தேவை.எங்கு கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. ஓரிரு வாரங்களில் முதல் 12 அதிகாரங்கள் (120 கதைகள்) புத்தகமாக வெளிவரும். வெளிவந்ததும் விவரங்களைத் தெரிவிக்கிறேன். நன்றி.

      Delete